லீட்ஸ்; இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும், பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. இந்திய அணி முதலில் 471 ரன்கள் எடுத்தது. அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் பும்ரா தவிர யாராலும் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்திய வீரர்கள் விக்கெட் வீழ்த்த முடியாததால் சோர்வடைந்து காணப்பட்டனர்.
இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவுக்கு முன்னர், பும்ரா ஆடுகளத்தை விட்டு விலகி ஓய்வறைக்குச் சென்றார். அப்போது பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உடன் அவர் தீவிரமாக ஆலோசனை செய்துகொண்டிருந்தார். இந்திய அணியின் பந்துவீச்சு சரியாக இல்லை என்பது குறித்து பும்ரா கௌதம் கம்பீரிடம் கூறியிருப்பார் என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் விவாதித்து வருகின்றனர்.

இதற்கு முன் ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தபோது, பந்துவீச்சு திட்டங்களை வகுப்பதில் பும்ராவுக்கு அதிக பங்கு இருந்தது. மேலும் அவரே துணை கேப்டனாகவும் பல தொடர்களில் நியமிக்கப்பட்டிருந்தார். அதனால் இந்திய அணியின் பந்துவீச்சு பெரும்பாலான தொடர்களில் அழுத்தத்துக்கு உள்ளானாலும், அதிலிருந்து மீண்டு வந்தது.
ஆனால் தற்போது சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர்தான் அணியின் முக்கிய முடிவுகளை எடுப்பவர்களாக உள்ளனர். பும்ரா ஓரம் கட்டப்பட்டு விட்டார் என்ற பேச்சு எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. இதைத் தொடர்ந்து பும்ரா தலைமைப் பயிற்சியாளர் கம்பீரிடம் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். இரண்டாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அபாரமாக ரன்களைக் குவித்தது.
முதல் ஓவரில் ஜாக் கிராலி விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். ஆனால் அதன் பிறகு பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தனர். பென் டக்கெட் 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் 28 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரின் விக்கெட்டையும் பும்ரா தான் வீழ்த்தினார்.
மறுபுறம் ஒல்லி போப் சதம் அடித்து இருந்தார். ஹாரி புரூக் ரன் ஏதும் எடுக்காமல் ஆடுகளத்தில் இருந்தார். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இங்கிலாந்து 4.2 என்ற ரன் விகிதத்தில் ரன் குவித்து இருந்தது.