விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பும்ரா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்தப் போட்டியில் பும்ரா யார்க்கர் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை பயன்படுத்தியே இங்கிலாந்து அணியை நிலைகுலைய வைத்தார். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஆலி போப்புக்கு பந்தை தொடவே முடியாத வகையில் ஒரு யார்க்கர் வீசி ஸ்டம்ப்புகளை சிதற விட்டார்.

இந்த நிலையில், வெற்றிக்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவரது யார்க்கர் பந்துவீச்சு குறித்து கேட்கப்பட்டது. அப்போது பும்ரா, தான் முதன்முதலில் பந்து வீசத் துவங்கிய போதே யார்க்கர் பந்துகளை வீசித் தான் பந்துவீச கற்றுக் கொண்டதாக கூறினார். மேலும், பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சு ஜாம்பவான்களான வக்கார் யூனிஸ் மற்றும் வாசிம் அக்ரம் மற்றும் இந்தியாவின் ஜாகிர் கான் ஆகியோரை பார்த்து தான் யார்க்கர் வீச கற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து பும்ரா பேசுகையில், "நான் எப்போதும் எண்களை (விக்கெட் எண்ணிக்கையை) பார்ப்பது இல்லை. இளம் வீரராக அதைப் பார்த்து உற்சாகம் அடைந்தேன். ஆனால், இப்போது தேவையில்லாத சுமையாகவே உள்ளது. யார்க்கர் தான் நான் இளம் வீரராக கற்றுக் கொண்ட முதல் வேகப் பந்துவீச்சு முறை. ஜாம்பவான்கள் வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம் மற்றும் ஜாகிர் கானைக் கூட பார்த்து இதை கற்றுக் கொண்டேன்." என்றார்.
மேலும் இந்தப் போட்டியில் பந்துவீச்சு திட்டம் குறித்தும், ரோஹித் சர்மா உடனான ஆலோசனைகள் குறித்தும் பேசுகையில், "இந்திய அணி இப்போது அடுத்த கட்டத்துக்கு சென்று கொண்டு இருக்கிறது. இளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவ வேண்டிய கடமை எனக்கு உள்ளது. ரோஹித்துடன் நீண்ட காலமாக ஆடி வருகிறேன். அவருடன் சில விஷயங்களை நான் ஆலோசித்தேன். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் எனக்கும் எந்த போட்டியும் இல்லை." என்றார் பும்ரா.