IND vs ENG: 3 வீரர்கள் இந்திய ஒருநாள் அணியில் இருந்து நீக்கம்.. உள்ளே வந்த 2 டாப் வீரர்கள்
சென்னை: அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள நிலையில், 3 வீரர்கள் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இளம் வீரர் ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இத்தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் சதம் அடித்த இடதுகை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகியிருந்த சீனியர் வீரர் விராட் கோலி தற்போது முழுமையாக குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார். நட்சத்திர வீரர் கோலியின் வருகையால் மட்டுமே, நல்ல ஃபார்மில் இருந்தும் ஜெய்ஸ்வாலை அணியில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு தேர்வுக்குழு தள்ளப்பட்டுள்ளது.
மற்றொருபுறம், சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்ஷ் துபே மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் ஆகியோரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டும், தங்களது திறமையை நிரூபிக்க தவறி எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் இவர்களின் நீக்கம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி உள்ளனர். இவர்களுக்கு பதிலாக அக்சர் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பின் முதன்முறையாக ஒருநாள் போட்டிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் நீண்ட இடைவெளிக்குப் பின் அக்சர் படேல் மீண்டும் ஒருநாள் அணியில் இணைந்துள்ளார். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக தேர்வு செய்யப்படவில்லை. இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 14 அன்று பர்மிங்காமில் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications
