ஐதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 88 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அவருக்கு பெரியதாக உதவவில்லை.

இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 80 ரன்களும், கேஎல் ராகுல் 86 ரன்களும், ஜடேஜா 87 ரன்களும் அடிக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்தது.
190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியது. அப்போது இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை அடையும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது.
தொடக்க வீரர் ஜாக் கிராலி 31 ரன்களும், பென் டக்கட் 47 ரன்களும் எடுத்து முதல் விக்கெட்டுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். முதல் இன்னிங்சில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்த ஆலி போப், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு கடும் தலைவலியை கொடுத்திருக்கிறார். ஆலி போப் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும் இவர் கடைசி வரை நின்று 208 பந்துகளை பிடித்து 148 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்.
இன்னும் இங்கிலாந்து அணிக்கு நான்கு விக்கெட்டுகள் எஞ்சி இருக்கிறது. தற்போது இந்திய அணியை விட 126 ரன்கள் கூடுதலாக அடித்திருக்கிறது. இன்னும் இங்கிலாந்து அணி 50 முதல் 100 ரன்கள் கூடுதலாக அடித்தால் அது நிச்சயம் இந்தியாவுக்கு கடும் சவாலை கொடுக்கும். எப்போதுமே சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் கடைசி இன்னிங்ஸ் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும். இதனால் 150 ரன்கள் மேல் இலக்கு சென்றாலே அது பேட்டிங் செய்யும் அணிக்கு ஆபத்தை கொடுக்கும். தற்போது இந்திய அணியில் ரோகித் சர்மா, கில் போன்ற வீரர்கள் ஃபார்மில் இல்லாததால் இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை இந்தியா எட்டுமா என்று சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.