IND VS ENG: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தற்போது கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சம்பிரதாய ஆட்டமாக வரும் மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.
இந்த தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. காரணம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு திடீரென்று தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து விலகினார்.

மேலும் அவரிடத்தில் விளையாடி அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுலும் காயம் காரணமாக தொடரில் பாதியில் விலகினார். இதேபோன்று முகமது ஷமியும் இந்த தொடரில் விளையாடவில்லை. ஜடேஜா காயம் காரணமாக ஒரு போட்டியிலும் ஸ்ரேயாஸ் மோசமான ஃபார்ம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியில் நீக்கப்பட்டார். மேலும் ரிஷப் பண்ட், இஷான் கிஷன் ஆகியோர் இல்லாத நிலையில் கே எஸ் பரத் முதல் விக்கெட் கீப்பராக கொண்டுவரப்பட்டார்.
ஆனால் அவரும் பேட்டிங்கில் சொதப்பியதால் நீக்கப்பட்டார். இந்த சூழலில் சீனியர் வீரர்கள் யாரும் இல்லாமல் ரோகித் படை பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தி இருக்கிறது. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய ஒரு அத்தியாயமாக அமைந்திருக்கிறது. காரணம் சீனியர்கள் இல்லை என்றாலும் ஜெய்ஸ்வால் துருவ் ஜூரல், சர்பராஸ் கான், குல்தீப் யாதவ் ஆகாஷ் தீப் போன்ற வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து இந்திய அணியை பல சரிவிலிருந்து மீட்டு இருக்கிறார்கள்.
இந்தத் தொடரில் ஜெய்ஸ்வால் 655 ரன்களை குவித்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார். அவருடைய சராசரி 93 என்ற அளவில் இருக்கிறது. இந்தத் தொடரில் இரண்டு இரட்டை சதம் அடித்ததன் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு ஜெய்ஸ்வாலின் பங்கு மிகவும் பெரியதாக இருந்தது. இதைப் போன்று கில் இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் தடுமாறினாலும் பிறகு தன்னுடைய பார்மை மீட்டு சதம் அடித்தார்.
முக்கிய போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியை காப்பாற்றி இருக்கிறார். இதேபோன்று விக்கெட் கீப்பராக விளையாடிய துருவ் ஜூரல் நான்காவது டெஸ்டில் இந்திய அணி தடுமாறிய போது 90 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் இலக்கு அருகே வரை கொண்டு வந்தார். இதன் மூலம் 100 ரன்கள் பின்தங்கி இருக்க வேண்டிய இந்திய அணி 46 ரன்கள் மட்டும் தான் பின்தங்கி இருந்தது.
இதேபோன்று சர்பராஸ் கான் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் விளையாடினார். இதில் சர்பராஸ் கான் முக்கிய கட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்து தன்னுடைய திறமையை நிரூபித்தார். இந்த நிலையில் அஸ்வின் இல்லாத போது குல்தீப் யாதவ், தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார்.
விக்கெட்டுகள் கிடைக்காத போதெல்லாம் குல்தீப் யாதவ், ரோகித் சர்மாவுக்கு விக்கெட்டை பெற்றுக் கொடுத்தார். இதன் காரணமாக இந்தியாவுக்கு வெற்றி சுலபமானது. இப்படி சீனியர் வீரர்கள் பலரும் இல்லாத நிலையில் ஜூனியர் வீரர்கள் தங்களுடைய திறமையை காட்டி இருக்கிறார்கள். இதன் காரணமாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.