என்னைவிட அவர் தான் சிறந்தவர்.. ஆட்ட நாயகனே அவர்தான்.. இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய ரோகித் சர்மா!
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி குறித்து ரோகித் சர்மா பேசிய கருத்து, ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் சுவாரஸ்யமாக நடைபெற்று முடிந்தது.
இதில் இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் இந்த தொடரில் 2 - 1 என் முன்னிலை வகிக்கிறது.

ரோகித்தின் சதம்
இந்த போட்டியில் இந்திய அணி கம்பேக் கொடுப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் ரோகித் சர்மா. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு சுருண்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்களை குவித்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மாவின் சதம் இந்திய வீரர்களுக்கு நம்பிக்கை அளித்தது. இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

ரோகித் மகிழ்ச்சி
இந்நிலையில் தனது ஆட்டம் குறித்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர், எங்களின் இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வெளிநாட்டு மைதானங்களில் கிடைக்கும் வெற்றி என்பது மிகவும் சிறப்பானது. இந்த தொடரின் தொடக்கம் முதலே நாங்கள் சிறப்பான ஆட்டத்தை கொடுத்து வருகிறோம். இனி வரும் அடுத்த போட்டிகளிலும் இதே போன்ற சிறப்பான ஆட்டத்தையே கொடுப்போம்.

ஜோ ரூட் விக்கெட்
எங்களுடைய அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியை அணுகியதால் சிறப்பான வெற்றியை பெற்றோம். குறிப்பாக 2 இன்னிங்ஸிலும் ஷர்துல் தாக்கூர் மிகப்பெரும் உதவியாக இருந்தார். இரண்டாவது இன்னிங்சில் ஜோ ரூட் விக்கெட் வீழ்த்தியது இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

ஆட்ட நாயகன் அவர்தான்
என்னை பொருத்தவரை ஷர்துல் தாகூர் விளையாடியது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்ஸாக இருந்தது. உண்மையாக கூற வேண்டும் என்றால் ஆட்டநாயகன் விருதுக்கு அவர் தான் தகுதியானவர். முதல் இன்னிங்சில் அவர் செய்த பேட்டிங்கை நம்மால் மறக்க முடியாது. 31 பந்துகளில் 50 ரன்கள் அதுவும் வெளிநாட்டு மைதானத்தில் அடிப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. ஒவ்வொரு முறையும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது தனது பேட்டிங் மற்றும் பவுலிங் திறமையை அவர் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார். அதனை சிறப்பாகவும் செய்து முடித்துள்ளார் என கூறினார்.


Click it and Unblock the Notifications