ராஞ்சி : இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.
இந்திய அணியின் மற்ற சீனியர் வீரர்கள் எல்லாம் இந்த தொடரில் பங்கேற்காத நிலையில் கேப்டனான ரோகித் சர்மா மட்டும் தனி ஆளாக இளம் வீரர்களை வழிநடத்தி போராடி வருகிறார். இந்த தொடரில் ரோஹித் சர்மாவுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் 24, 39 ரன்கள் எடுத்த ரோஹித் இரண்டாவது டெஸ்டில் 14, 13 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தார்.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்டில் அபாரமாக விளையாடி 131, 19 ரன்களை ரோகித் சர்மா எடுத்த நிலையில் நான்காவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றத்தை அளித்தார்.இந்த நிலையில் கடைசி இன்னிங்ஸில் 192 முதல் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இதில் ரோகித் சர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்த இன்னிங்ஸை விளையாடிக் கொண்டிருந்த போது ரோகித் சர்மா ஒரு மகத்தான மைல் கல்லை எட்டினார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களை தொட்ட வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இந்த மைல் கல்லை தொட்ட 17வது இந்திய வீரர், அதிவேகமாக தொட்ட 11 வது இந்திய வீரர் என்ற பெருமை ரோகித் சர்மாவுக்கு கிடைத்தது.
தன்னுடைய நூறாவது டெஸ்ட் இன்னிங்ஸில் ரோகித் சர்மா இந்த மைல் கல்லை எட்டி இருக்கிறார். இதற்கு முன்பு அதிவேகமாக 79 இன்னிங்சில் ஷேவாக்கும், 81 இன்னிங்ஸில் கவாஸ்கரும், 84 இன்னிங்சில் டிராவிட், புஜாரா போன்ற வீரர்களும் 86 இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கரும், 88 இன்னிங்சில் அசாருதீனும் 89 இன்னிங்சில் விராட் கோலியும் 96 வது இன்னிங்ஸில் குண்டப்பா விஸ்வநாத் மற்றும் கௌதம் கம்பீரும் 99 இன்னிங்சில் மோஹிந்தர் அமர்நாத்தும் இந்த மைல் கல்லை எட்டி இருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் 3001 ரன்னிலிருந்து 4000 ரன் அடிப்பதற்கு ரோகித் சர்மா வெறும் 26 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டார். இதேபோன்று 2001 ரன்னிலிருந்து 3000 ரன்கள் அடிப்பதற்கு 23 இன்னிங்ஸ்களும் 1001 ரன்னிலிருந்து 2000 ரன்கள் எடுப்பதற்கு 18 இன்னிங்ஸ்களும் ரோஹித் சர்மா எடுத்துக்கொண்டார். ரோகித் சர்மா தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை மிகவும் தாமதமாக தான் தொடங்கினார்.
2007 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் விளையாடிய ரோகித் சர்மா தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை 2013 ஆம் ஆண்டு தான் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக இருந்த சில மணி நேரத்திற்கு முன்பு அவருக்கு காயம் ஏற்பட்டதால், அந்த இடத்தில் சாகா களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.