ராஜ்காட் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி கொண்டிருந்தார் சர்பிராஸ் கான். ஜடேஜா ரன் அவுட் செய்ததால் கேப்டன் ரோகித் சர்மா கடுப்பாகி தொப்பியை தூக்கி எறிந்தார். ராஜ்காட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்தது.
இதில் இந்திய அணி மிகப் பெரிய ஸ்கோரை அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். காரணம் ஆடுகளம் தற்போது ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தாலும், நேரம் ஆக ஆக ஆடுகளம் தோய்வாக மாறி பேட்ஸ்மேனுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும்.

இதனால் முதலில் இந்தியா 400 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. எனினும் இந்திய அணியின் முன் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இன்னும் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஜோடி அபாரமாக விளையாடி 204 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 131 ரன்களில் வெளியேற ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் சர்பிராஸ் கான் அபாரமாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்து வந்தார்.
ஜடேஜா சுயநலமாக சதத்தை அடிக்க வேண்டும் என்பதற்காக பொறுமையாக விளையாடினார். ஆனால் சர்பிராஸ் கான் கிடைத்த வாய்ப்பை எல்லாம் சிறப்பாக பயன்படுத்தி பவுண்டரிகளை விளாசி தள்ளினார். 48 பந்துகளில் எல்லாம் அரை சதத்தை கடந்த சர்பிராஸ் கான் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி சதம் அடித்திருந்தால் இந்தியா 500 ரன்கள் கூட தொட்டிருக்கும்.
ஆனால் இதை எல்லாம் ஜடேஜாவின் செயல் தவிடுபொடியாக மாற்றியது. ஜடேஜா 99 ரன்கள் இருந்தபோது சதம் அடிப்பதற்காக ஒரு ரன்னை எடுக்க திணறினார். அப்போது 100வது ரன் எடுக்க ஜடேஜா பாதி தூரம் ஓடி வந்துவிட்டார். ஜடேஜா ஓடியதை நம்பி சர்பிராஸ் கானும் பந்து எங்கு செல்கிறது என்று கூட பார்க்காமல் பாதி தூரம் ஓடிவிட்டார். ஆனால் பந்து பில்டரின் கையில் சென்றதை உணர்ந்த ஜடேஜா அப்படியே நின்றுவிட்டார்.
இதனால் சர்பிராஸ் கான் பாதியிலே சிக்கிக் கொண்டு மீண்டும் கிரீசுக்கு செல்வதற்கு முன்பு ரன் அவுட் ஆனார். இதனால் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செயலை பார்த்த கேப்டன் ரோகித் சர்மா தலையில் கை வைத்துக் கொண்டு தன்னுடைய தொப்பியை கோபமாக தூக்கி எரிந்து சில வார்த்தைகளால் திட்டினார். அதன் பிறகு சர்பிராஸ் கான் மைதானத்தில் இருந்து பெவிலியனுக்கு வந்தபோது இனி எதிரில் இருக்கும் பேட்ஸ்மேனை நம்பாமல் பந்து பில்டரின் கையில் செல்கிறதா என்பதை பார்த்துக்கொண்டு ஓடுங்கள் என்று அறிவுரை கூறினர்.