Sarfaraz khan : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய சர்பிராஸ் கான் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் அரை சதம் அடித்திருக்கிறார். வாய்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த சர்பிராஸ் கான் 6 ஆண்டுகளுக்கு பிறகு தமக்கு கிடைத்த முதல் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், கில் டக் அவுட், ரஜத் பட்டிதார் ஐந்து ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணி 33 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா ஜடேஜா ஆகியோர் அபாரமாக விளையாடி 204 ரன்கள் சேர்த்தனர்.

சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 196 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். இதில் 14 பவுண்டர்களும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இந்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டம் இழந்த உடன் இந்திய அணி மீண்டும் சரிவை நோக்கி செல்லும் என்ற அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் அப்போது களமிறங்கிய சர்பிராஸ் கான் தன்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்தினார்.
ரஞ்சி கிரிக்கெட்டில் செய்த சம்பவத்தை சர்வதேச கிரிக்கெட்டிலும் சர்பிராஸ் கான் செய்ய தொடங்கினார். நெருக்கடியான பந்துகளை அபாரமாக கையாண்ட சர்பிராஸ் கான் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து ஆடினார். முதல் 20 ரன்கள் வரை கொஞ்சம் பொறுமை காத்த சர்பிராஸ் கான், அதன் பிறகு அதிரடியை காட்டினார்.
சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை அல்வா சாப்பிடுவது போல் சாப்பிட்ட அவர் ஏழு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து 48 பந்துகளில் எல்லாம் அரை சதம் கடந்தார்.
இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே அதிவேகமாக அரை சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு ஹர்திக் பாண்டியா 48 பந்துகளில் அதிவேகமாக அரை சதம் அடித்த அந்த நிலையில் தற்போது சர்பிராஸ் கான் இதனை சமன் செய்து இருக்கிறார். சர்பிராஸ் கானின் இந்த சாதனையை அவருடைய குடும்பத்தினர் உற்சாகமாக கொண்டாடினர். சர்பிராஸ் ஆட்டம் முதிர்ச்சி உடையதாக இருப்பதாகவும் அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் எவ்வளவு சிறப்பாக பாடங்களை கற்று இருக்கிறார் என்பதை வெளிக்காட்டி இருப்பதாக கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.