லண்டன்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்று இருக்கும் இந்திய அணியை வரவேற்க ரசிகர்களே வராதது, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து இந்திய அணிக்கு வரவேற்பு இல்லை எனவும் பரவலாகப் பேச்சு எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக வியாபார ரீதியாக உச்சத்தில் உள்ளது. இந்திய அணி ஆடும் போட்டிகளை கோடிக்கணக்கான மக்கள் பார்த்து வருகிறார்கள். சிறிய டி20 தொடர்களைக் கூட கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கிறார்கள். தொலைக்காட்சி மட்டுமின்றி ஸ்ட்ரீமிங் மூலம் மொபைல் மற்றும் இணையதளத்திலும் லட்சக்கணக்கானோர் பார்த்து வருவதால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.

ஆனால், நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடும் போட்டிகளுக்கு மட்டுமே அதிக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இல்லையென்றால் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக சரிகிறது. குறிப்பாக விராட் கோலி சதம் அடித்தாலோ அல்லது சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்றோர் டி20 போட்டிகளில் அதிரடியாக ஆடினாலோ, அப்போது பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே, இந்திய அணியின் வளர்ச்சி என்பது நட்சத்திர வீரர்களைச் சார்ந்தே இருக்கிறது.
குறிப்பாக டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை, விராட் கோலி அதன் மையமாக இருந்து வந்தார். அவருக்காகவே டெஸ்ட் போட்டிகளை பலரும் பார்த்து வந்தனர். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வி.வி.எஸ். லட்சுமணன், அனில் கும்ப்ளே போன்ற டெஸ்ட் ஜாம்பவான்கள் இருந்த வரை இந்திய அணி ஆடும் போட்டிகளைப் பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டம் இருந்தது.
ஆனால், அதற்கு அடுத்த தலைமுறையைப் பொறுத்தவரை விராட் கோலி மட்டுமே முதன்மையானவராக இருக்கிறார். ரஹானே, புஜாரா போன்றோரும் சிறந்த டெஸ்ட் வீரர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தற்போது வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஒன்றாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதை அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரர்கள் எனச் சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை.
இந்த நிலையில் தான் இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காகப் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு விமான நிலையத்தில் அவர்களை வரவேற்பதற்கு ரசிகர்கள் காத்திருப்பார்கள் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரசிகர்களும் வரவில்லை, ஊடகத்தினரும் அங்கு வரவில்லை. இதை அடுத்து, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் வந்தால் தான் ஊடகத்தினரோ ரசிகர்களோ வந்து பார்ப்பார்கள் என்ற உண்மை வெளியாகி உள்ளது.