அன்று யுவ்ராஜ் சிங், இன்று பும்ரா.. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை.. அதுவும் பிராட் பவுலிங்கில்..
எட்ஜ்பாஸ்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா பேட்டிங்கில் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

முதல் இன்னிங்ஸ் பேட்டிங்
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப 98 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் வந்த ரிஷப் பண்ட் 146 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 104 ரன்களும் விளாச இந்திய அணி 375 /9 ரன்களை எடுத்தது. டெயில் எண்டர் பேட்ஸ்மேன்கள் இருந்ததால் 400 ரன்கள் எட்ட முடியுமா என்ற குழப்பம் எழுந்தது.

பும்ராவின் வேட்டை
இந்த நிலையில் தான் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, தனது பேட்டிங்கில் புதிய உலக சாதனை படைத்து, இந்திய அணியை உச்சத்திற்கு கொண்டு சென்றார். இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர் பிராட் வீசிய ஓவரில் மட்டும் 35 ரன்களை விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை சேர்த்த வீரர் என்ற உலக சாதனையை பும்ரா படைத்தார்.

ஸ்கோர் விவரம்
அந்த ஓவரில் மட்டும் 4, 5 வைட்கள், நோ பால் 6*, 4, 4, 4, 6, 1 என மொத்தமாக 35 ரன்களை அடித்தார். ஒரே ஓவரில் 5 வைட் மற்றும் ஒரு நோ பால் வீசுவதா என ஸ்டூவர்ட் பிராட் மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஆனால் ஸ்டூவர் பிராட்டிற்கு எதிராக இத்தனை ரன்களை அடித்ததில் மற்றொரு சுவாரஸ்யம் உள்ளது.

மற்றொரு சுவாரஸ்யம்
இதே ஸ்டூவர்ட் பிராட்டிற்கு எதிராக தான் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை யுவ்ராஜ் சிங் பெற்றார். அன்று யுவ்ராஜ் சிங்கை போன்று இன்று ஜஸ்பிரித் பும்ராவும் பிராட்டை மிகவும் கடுப்பாக்கினார்.


Click it and Unblock the Notifications