IND vs ENG: “ஷமியின் ஸீம் பொசிஷனுக்கு அருகே கூட பும்ராவால் வர முடியாது ஆனா”.. புஜாரா ஓபன் டாக்
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, தற்போதைய இந்திய டெஸ்ட் அணியை பந்துவீச்சில் வழிநடத்தி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதலை முன்னெடுத்தார்.
ஆனால், பும்ராவை விட ஷமி சிறந்த ஸீம் பொசிஷன் உடையவர் என புஜாரா கூறி உள்ளார். ஆனால், அவர் சோம்பேறித்தனமாக இருப்பார் எனவும் வெளிப்படையாக கூறி இருக்கிறார். ஷமி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஸீம் பவுலிங் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் ஷமி சிறந்து விளங்கி வருகிறார்.

புஜாரா இது பற்றி கூறுகையில், "பும்ரா திறமையானவர். தனித்துவமானவர். ஆனால், ஸீம் பொசிஷன் (Seam Position) என்று வரும்போது, முகமது ஷமியை அடித்துக்கொள்ள இந்தியாவில் வேறு யாரும் இல்லை. ஆனால், ஷமி சற்று சோம்பேறித்தனமானவர். உடல் தகுதிக்காக அவரை நாம் தொடர்ந்து தள்ள வேண்டி இருக்கும். ஒருமுறை அவருக்கு வேகமாக பந்து வீச வேண்டும் என்று சொல்லப்பட்டபோது, 'நான் ஏற்கனவே வேகமாகத்தான் பந்து வீசுகிறேன்' என்று பதிலளித்தார்," என்று நகைச்சுவையுடன் தெரிவித்தார்.
முகமது ஷமி, 2023 உலகக் கோப்பைத் தொடரின்போது ஏற்பட்ட காயத்தால் 14 மாதங்கள் களத்துக்கு வெளியே இருந்தார். 2025 சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் அவர் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பி, வங்கதேசத்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக பந்து வீசினார்.
பின்னர், ஐபிஎல் 2025 தொடரில் ஷமியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. அவர் ரன்களை வாரி வழங்கினார். பிசிசிஐ மருத்துவக் குழு, அவரது உடல் தகுதி டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ற அளவில் இல்லை என்று அறிக்கை அளித்ததால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை.
இதனால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பும்ரா, முகமது சிராஜ், மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரைச் சார்ந்து உள்ளது. இவர்களில், முதல் இன்னிங்ஸில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications