விசாகப்பட்டினம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனை அடுத்து பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. ஆனால் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து கேஎல் ராகுல், ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் விலகி இருக்கிறார்கள்.

ஏற்கனவே அணியில் முகமது சமி மற்றும் விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் இல்லாத நிலையில் இவ்விருவரும் விலகி இருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.எனினும் தற்போது சர்பிராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நடு வரிசையில் சர்பிராஸ்கான் விளையாடுவார் என்பது 100 சதவீதம் தற்போது உறுதியாகிவிட்டது.
26 வயதான சர்பிராஸ் கான் அண்டர் 19 கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ரஞ்சி கோப்பையில் சதம் அடித்து டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருந்த வீரர் என்று பெருமையை படைத்திருந்தார்.இதுவரை 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3912 ரன்களை சர்பிராஸ்கான் அடித்திருக்கிறார்.
இதில் 14 சதமும் ,11 அரை சதமும் அடங்கும். இதில் அதிகபட்சமாக அவர் அடித்திருக்கும் ஸ்கோர் 301* ரன்கள் ஆகும். இதேபோன்று தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய ஏ அணிக்கு விளையாடிய சர்பிராஸ்கான் அங்கு அதிவேக சதம் அடித்திருந்தார். இதே போன்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக சர்பிராஸ்கான் 160 பந்துகளில் 161 ரன்கள் குவித்து இருந்தார்.
இவ்வளவு சாதனைகளை படைத்தும் சர்பிராஸ் கானுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. அவருக்கு வாய்ப்பு வழங்காமல் தொடர்ந்து கில் ஸ்ரேயாஸ் போன்ற வீரர்களுக்கு தான் தேர்வு குழு முன்னுரிமை வழங்கி வந்தது. இந்த நிலையில் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகி இருப்பதால் சர்பிராஸ்கானுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை அவர் கெட்டியாக பிடித்துக் கொண்டால் நிச்சயம் இந்திய அணியில் அவருக்கு தொடர்ந்து இடம் கிடைக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர்.