ஐதராபாத் : இந்தியா இங்கிலாந்து அணி இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஜனவரி 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இந்த தொடரில் விளையாடுகிறது. இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இரண்டு இடத்தை நிறைவு செய்ய முடியும்.

இதுவரை இந்திய மண்ணில் கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு வேறு இவரை எந்த ஒரு அணியும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதில்லை. இந்த சாதனையை தொடர வேண்டுமென்றால் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்ள வேண்டும். இங்கிலாந்து தற்போது பேஸ் பால் என்ற திட்டத்தில் சிறப்பாக விளையாடி வருகிறது.
அவர்களை கட்டுப்படுத்த இந்திய அணி வீரர்கள் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும். இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு மகத்தான சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார். அதாவது ரோகித் சர்மாவுக்கு இன்னும் 156 ரன்கள் தேவைப்படுகிறது. அதனை அவர் எடுத்து விட்டால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்து விடுவார்.
தற்போது ரோகித் சர்மா 18 ஆயிரத்து 420 ரன்கள் எடுத்திருக்கிறார். கங்குலி 18,575 ரன்கள் எடுத்திருக்கிறார். இதனால் இன்னும் 156 எண்கள் ரோகித் எடுத்தால் கங்குலியை பின்னுக்கு தள்ளிவிடுவார். இந்த பட்டியலில் 34 ஆயிரத்து 357 ரன்கள் உடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார்.
26 ஆயிரத்து 733 ரன்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் 24 208 ரன்கள் உடன் ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் எடுத்த தொடக்க வீரர் பட்டியலில் ரோகித் சர்மா தற்போது 41 சதம் எடுத்து நான்காவது இடத்தில் இருக்கிறார். வார்னர் 49 சதத்துடன் முதலிடத்திலும், சச்சின் 45 சதத்துடன் இரண்டாவது இடத்திலும் கெயில் 42 சதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.