Akash deep : இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 27 வயதான வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் அறிமுகமாகியிருக்கிறார். முகேஷ் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆகாஷ் தீப்பிற்கு அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது.
ஆகாஷ் தீப் அதிவேகமாக பந்து வீசும் வீரர் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடக்கூடியவராக திகழ்கிறார். இதனால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆகாஷ் பீகாரில் பிறந்து வளர்ந்தாலும் தன்னுடைய இளம் வயதில் மேற்கு வங்கத்திற்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார்.

பீகாரில் கிரிக்கெட் பயிற்சியை ஆகாஷ் தீப் எடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அவருடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. தனது மகன் ஆகாஷ் கிரிக்கெட் விளையாடுவது தந்தைக்கு பிடிக்கவில்லை. எனினும் தந்தைக்குத் தெரியாமல் கிரிக்கெட் பயிற்சி எடுத்துக் கொண்டு சில போட்டிகளில் ஆகாஷ் விளையாடி இருக்கிறார்.
இந்த நிலையில் ஆகாஷின் தந்தைக்கு திடீரென்று பக்கவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவருடைய குடும்பமே நலிந்து போய்விட்டது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆகாஷின் தந்தை சில காலத்தில் உயிரிழந்திருக்கிறார். இதிலிருந்து மீண்டு வருவதற்குள் ஆகாஷின் மூத்த சகோதரரும் உடல் நல குறைவு ஏற்பட்டு இருக்கிறது.
தீராத காய்ச்சல் இருந்த நிலையில் அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆகாஷின் அண்ணனும் உயிரிழந்திருக்கிறார்.
சுமார் ஆறு மாத இடைவெளியில் தன்னுடைய இரண்டு குடும்ப உறுப்பினர்களை இழந்த ஆகாஷ் தனது அம்மாவை பார்த்துக் கொள்வதற்காக கிரிக்கெட்டை கைவிட்டு வேலைக்கு சென்று இருக்கிறார். எனினும் கிரிக்கெட் கனவு அவரை விடாமல் துரத்தி இருக்கிறது.இதை அடுத்து மீண்டும் கொல்கத்தாவுக்கு சென்று அங்கு தன்னுடைய மாமா மகனுடன் இணைந்து கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
ஆகாஷ் நல்ல வேகமாக வீசுவதால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு உடனடியாக கிடைத்தது. பெங்கால் அணியில் கவனிக்கத்தக்க வீரராக ஆகாஷ் இருந்தபோது திடீரென்று அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதிலிருந்து மீண்டு வந்த ஆகாஷ் 2019 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் முதல் முறையாக விளையாடி இருக்கிறார்.
ஆகாஷுக்கு பேட்டிங்கும் ஒரு அளவுக்கு நன்றாக வரும் என்பதால் அவர் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
அதிலிருந்து கடுமையாக உழைத்து வந்த ஆகாஷ் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். தன் வாழ்க்கையில் பல கஷ்டங்கள், இழப்புகள், காயங்கள் என அனைத்தையும் பார்த்து வந்த ஆகாஷ் தீப் தற்போது வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்க்கையில் எவ்வளவு சோகங்கள் இருந்தாலும் ஒரு நாள் அனைத்தும் மாறும் என்பதற்கு ஆகாஷ் நல்ல எடுத்துக்காட்டு.