டுபிளின் : IND vs IRE - இந்தியா அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி ஏழு முப்பது மணிக்கு ஆரம்பிக்கிறது.
ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி பங்கேற்கும் தொடராகும். இதில் அனைவரின் கவனமும் நட்சத்திர வீரர் பும்ரா காயத்திலிருந்து திரும்பிய பிறகு எவ்வாறு செயல்பட போகிறார் என்பதை எதிர்நோக்கி இருக்கிறது.

மேலும் பல சீனியர் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்காததால் முற்றிலும் இளம் வீரர்கள் இந்த தொடரில் விளையாட உள்ளனர். இந்த செய்தியில் அயர்லாந்து தொடரில் தங்களது முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாட போகும் மூன்று வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ரிங்கு சிங். ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக களம் இறங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரிங்கு சிங். குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ந்து ஐந்து சிக்சர்களை விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றவர்.
இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக திகழக்கூடியவர் என ரிங்கு சிங்கை பலரும் பாராட்டு வருகின்றனர். இதனால் அயர்லாந்து தொடர் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க கூடியவர் பிரசித் கிருஷ்ணா. 27 வயதான பிரசித் கிருஷ்ணா இதுவரை 14 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 25 விக்கெட் எடுத்திருக்கிறார். இதில் குறிப்பாக ஒரு இன்னிங்ஸில் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணியின் நம்பிக்கை வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்க்கும் முன்பு மீண்டும் அணிக்கு திரும்புகிறார். இதனால் அயர்லாந்து தொடரில் பிரசித் கிருஷ்ணா சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாக வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கக்கூடியவர் ஜித்தேஷ் ஷர்மா. இரண்டாவது விக்கெட் கீப்பராக அணியில் ஜித்தேஷ் சர்மா சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் வெறும் பேட்ஸ்மேனாக இந்த தொடரில் களம் இறக்கப்பட்டால் ஜித்தேஷ் சர்மாவுக்கு குறைந்தபட்சம் ஒரு போட்டியில் ஆவது விக்கெட் கீப்பராக களமிறங்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.