மும்பை : அயர்லாந்துக்கு எதிராக t20 தொடரில் இந்திய அணி விளையாடுவதன் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை இந்திய கிரிக்கெட் எதிர்கொள்ள உள்ளது.
எப்போதும் ஹர்திக் தலைமையில் இந்திய அணி t20 தொடரில் தங்களது இரண்டாம் தர அணியை அனுப்பி விளையாடும். ஆனால் இம்முறை இந்திய அணி தங்களுடைய மூன்றாம் தர அணியை அயர்லாந்து தொடருக்கு அனுப்பி இருக்கிறது.

இதில் சுமார் ஆறு மாத காலத்திற்கு மேல் காயத்தால் அவதிப்பட்டு வந்த பும்ரா தற்போது முழு உடல் தகுதியை எட்டி கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். இந்த நிலையில் என்ன சவால்கள் பும்ராவுக்கு காத்திருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு பும்ராவுக்கு மேட்ச் பிராக்டிஸ் வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொடரில் அவர் விளையாட களமிறக்கப்பட்டார். இதில் பும்ரா பந்து வீசும் போது எந்த உடல் வலியும் இல்லாமல் இருந்தால் அது இந்திய அணிக்கு நல்ல விஷயமாகும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் நூறு சதவீதம் உடல் தகுதியை எட்டிவிட்டார் என்று அர்த்தம். தற்போது இதனை நோக்கி தான் பும்ரா செயல்பட்டு வருவார். காயத்திலிருந்து திரும்பி இருப்பதால் அவர் தன்னுடைய வழக்கமான பந்துவீச்சை எட்டுவதற்கு நேரம் பிடிக்கும். அதனை பும்ரா எந்த அளவுக்கு விரைவாக செய்கிறார் என்பதை பொறுத்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும்.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாததால் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணியின் லீடராக அவர் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்தத் தொடர் கில், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், சாஹல், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் கூட இடம்பெறவில்லை.
இதனால் முற்றிலும் இளம் வீரர்களை கொண்டு விளையாடுவதால் அவர்களை வழிநடத்தி வெற்றியை பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. பந்துவீச்சாளராகவும் இருந்து கொண்டு அணியையும் வழிநடத்தி வெற்றியும் பெற வேண்டும் என்ற நெருக்கடி பும்ராவுக்கு இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடர்பு போல் இல்லாமல் அயர்லாந்தில் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும்.
இதனால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி பெரிய இலக்கை நிர்ணயித்தும் அனுபவம் குன்றிய இந்திய வீரர்களை வைத்து அதனை கட்டுப்படுத்தவும் பும்ரா பல யுத்திகளை வகுக்க வேண்டும். மேலும் ருதுராஜ் போன்ற வீரர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து அவர்களுடைய முழு திறமையும் வெளிக்கொண்டவர வேண்டும். பும்ரா எதிர்கொள்ள போகும் பெரிய பிரச்சனையே இந்த தொடரில் இந்திய அணி பயிற்சியாளர்கள் யாரும் அயர்லாந்துக்கு செல்லவில்லை. எனவே வீரர்களை கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் தற்போது பும்ராவின் தலையில் தான் விழுந்துள்ளது.