இந்தியா - ஜப்பான் டி20 போட்டி நடப்பதில் சிக்கல்.. ஜப்பானை தாக்கும் கோர புயல்.. வானிலை அறிக்கை
நகோயா: இந்தியா - ஜப்பான் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க டி20 போட்டி திட்டமிட்டபடி செப்டம்பர் 22 அன்று நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜப்பான் நாட்டை 'துஜுவான்' என்ற சக்திவாய்ந்த புயல் புரட்டிப் போட்டு வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கனமழை மற்றும் சூறாவளிக் காற்று காரணமாக 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான சிறப்பு டி20 கிரிக்கெட் போட்டியும் மழையால் கைவிடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக ஆசிய விளையாட்டின் குதிரையேற்றப் போட்டிகள் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த புயல் குறித்து ஜப்பான் வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தலைநகர் டோக்கியோ மற்றும் சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள கான்டோ பிராந்தியத்தில் அதீத கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் கடந்த செப்டம்பர் 19 முதல் இதுவரை 300 மி.மீட்டருக்கும் அதிகமான மழை கொட்டித் தீர்த்துள்ளது.

புயல் கரையை நெருங்கும் போது மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இந்த கோர புயல் காரணமாக ஜப்பான் முழுவதும் விமான சேவைகள் முடங்கியுள்ளன. மொத்தம் 275-க்கும் மேற்பட்ட விமானங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் 120 உள்நாட்டு மற்றும் 15 சர்வதேச விமானங்களையும், மற்றொரு முன்னணி விமான நிறுவனம் 140 விமானங்களையும் ரத்து செய்துள்ளன. பல வழித்தடங்களில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
2026 ஆசிய விளையாட்டு தொடரில் கிரிக்கெட் காலிறுதிச் சுற்றில் இந்தியா நேரடியாக விளையாட உள்ளது. அதற்கு முன்பாகப் பயிற்சி எடுக்கும் நோக்கில், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி செவ்வாய்க்கிழமை ஜப்பான் அணியுடன் ஒரு நட்புரீதியான டி20 போட்டியில் விளையாட திட்டமிட்டிருந்தது. ஆனால் கான்டோ பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், இப்போட்டி திட்டமிட்டபடி நடப்பது சந்தேகமாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications

