கவுஹாத்தி: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இமால இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியமான 3வது டி20 போட்டி இன்று கவுஹாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த போட்டியில் 209 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணி மிக எளிதாக எட்டிப்பிடித்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று, இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை அசுர பலத்துடன் இருந்தாலும், பந்துவீச்சு சற்று கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. கடந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அதிக ரன்களை வாரி வழங்கினார். இந்நிலையில், கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்றைய போட்டியில் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வரும்பட்சத்தில் ஹர்ஷித் ராணா அணியிலிருந்து நீக்கப்படலாம்.
முதல் போட்டியில் காயமடைந்த அக்சர் படேலுக்குப் பதிலாகக் கடந்த போட்டியில் குல்தீப் யாதவ் களமிறங்கினார். அக்சர் படேல் முழுமையாகக் குணமடைந்திருந்தால் மட்டுமே அவர் அணியில் சேர்க்கப்படுவார். இல்லையெனில், குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்கரவர்த்தி ஆகியோரே சுழற்பந்து வீச்சாளர்களாகத் தொடர்வார்கள்.
2026 டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்திய அணி அனைத்து வீரர்களுக்கும் போட்டியில் ஆடும் வாய்ப்பு வழங்க திட்டமிடும். எனவே, வேறு சில மாற்றங்கள் செய்யவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், பேட்டிங்கில் பெரிய அளவில் பரிசோதனை முயற்சிகள் நடக்க வாய்ப்பு இல்லை. ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடர்களில் நடந்த பரிசோதனை முயற்சிகள் தோல்வி அடைந்ததால் இனி பேட்டிங் வரிசையில் பெரிய மாற்றம் இருக்காது என நம்பலாம்.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை, இது வாழ்வா சாவா போட்டியாகும். இன்றைய போட்டியில் தோற்றால் அந்த அணி தொடரை இழக்க நேரிடும். அந்த அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக இருந்தாலும், பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். பந்துவீச்சில் முன்னேற்றம் கண்டால் மட்டுமே அந்த அணியால் வெற்றி பெற முடியும்.
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா அல்லது ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி.
டிம் சீஃபர்ட், டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), கைல் ஜேமிசன், மேட் ஹென்றி, இஷ் சோதி, ஜேக்கப் டஃபி.