IND vs NZ: 120 கிமீ காற்று, 87% மழை.. 3-வது டி20 நடக்கும் வெலிங்டன் வானிலை அறிக்கை இதுதான்!
வெலிங்டன்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டம் வெலிங்டன் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்தப் போட்டி நடக்கும் நகரில் அதிக வேகத்தில் காற்று வீசுவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு சிக்கலும் எழுந்துள்ளது.
கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் இரண்டு போட்டிகளிலும் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முன்கூட்டியே தன்வசப்படுத்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி தீவிர முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், வெலிங்டன் நகரில் வீசும் பலத்த காற்று மற்றும் மழை அச்சுறுத்தல் போட்டிக்கு புதிய வில்லனாக உருவெடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, வெலிங்டனில் செவ்வாய்க்கிழமை காலையில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 87 சதவீதமாக மிகவும் அதிகமாக உள்ளது. சுமார் 3 மணி நேரம் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், வானம் 56 சதவீதம் வரை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பிற்பகலில் மழை பெய்வதற்கான வாய்ப்பு வெறும் 3 சதவீதமாக மளமளவெனக் குறையும். பின்னர் போட்டி நடைபெறும் மாலை மற்றும் இரவு வேளையில் மழைக்கான சாத்தியக்கூறு வெறும் 1 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பதால், ஆட்டம் தடைபடாமல் நடைபெற வாய்ப்புள்ளது. ஆனால், காலையில் பெய்யும் மழையால் ஆடுகளத்தில் அதிக நீர் தேங்கினால் சிக்கல் ஏற்படலாம்.
மழையை விட வெலிங்டனில் வீசும் சூறாவளி காற்றே இரு அணி வீரர்களுக்கும் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. திங்களன்று நடைபெற்ற இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தின் போது மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் பயங்கர காற்று வீசியுள்ளது. மைதானத்தில் மூன்று பக்கமும் திறந்தவெளி என்பதால் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதுகுறித்து பேசிய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், "வெலிங்டன் காற்று முற்றிலும் வித்தியாசமானது. வீரர்கள் சாக்குப்போக்கு சொல்லாமல் காற்றுக்கு எதிராகத் துணிச்சலுடன் பந்துவீசத் தயாராக வேண்டும்" என்று எச்சரித்துள்ளார்.
தொடரை இழக்காமல் காப்பாற்ற நியூசிலாந்து அணிக்கு இது வாழ்வா-சாவா போராட்டமாகும். அதேசமயம் காற்றின் திசையைக் கணித்து, இயற்கை சவால்களை முறியடித்து ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரைக் கைப்பற்ற இந்திய அணி முழு பலத்துடன் களம் காண்கிறது. இந்த கடுமையான சூழ்நிலையிலும் நியூசிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் தங்களது வெற்றிக் கொடியை நாட்டுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications

