துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ள நிலையில், இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, ஒரு பிரம்மாண்டமான உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்புடன் உள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் ஆகியோரின் மாபெரும் சாதனையை அபிஷேக் ஷர்மா தற்போது சமன் செய்துள்ளார். அதை இறுதிப் போட்டியில் முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது.
ரோஹித் சர்மா, முகமது ரிஸ்வான் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய மூவரும், சர்வதேச டி20 போட்டிகளில் தலா 7 முறை தொடர்ச்சியாக 30-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளனர். இதுவே தற்போது உலக சாதனையாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில், அபிஷேக் ஷர்மா 30 ரன்களைக் கடக்கும் பட்சத்தில், ரோஹித் மற்றும் ரிஸ்வானைப் பின்னுக்குத் தள்ளி, 8 முறை இந்தச் சாதனையைச் செய்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைப்பார்.

அபிஷேக் ஷர்மாவின் இந்த சாதனைப் பயணம், இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 135 ரன்களில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, இந்த ஆசிய கோப்பையில் அவர் ஆடிய ஆறு போட்டிகளிலும் 30 ரன்களைக் கடந்துள்ளார். இதில் முதல் மூன்று குரூப் சுற்றுப் போட்டிகளில் 30-களில் ரன் குவித்த அவர், அடுத்த மூன்று சூப்பர் 4 போட்டிகளிலும் (பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை) தொடர்ச்சியாக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்த 7 இன்னிங்ஸ்களில் மட்டும் அபிஷேக் ஷர்மா 444 ரன்களைக் குவித்துள்ளார். இது, ஐசிசி-யின் முழுநேர உறுப்பு நாடுகளின் வீரர்கள் மத்தியில் ஒரு சாதனையாகும். மேலும், சுவிட்சர்லாந்தின் ஃபஹீம் நசீர் வைத்துள்ள (450 ரன்கள்) ஒட்டுமொத்த உலக சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 6 ரன்களே தேவை.
இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ரன்களை அவர் 216.59 என்ற பிரமிக்க வைக்கும் ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார். 7 இன்னிங்ஸ்களில் 400-க்கும் மேற்பட்ட ரன்களை 200-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த வீரர்கள் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச்சுக்கு (214.51) அடுத்தபடியாக, அபிஷேக் ஷர்மா இரண்டாவது வீரராக இணைந்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான கடைசிப் போட்டியில், 31 பந்துகளில் 61 ரன்கள் விளாசி, சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான மாபெரும் இறுதிப் போட்டி, அபிஷேக் ஷர்மா இந்த உலக சாதனையை நிகழ்த்த ஒரு சரியான மேடையாக அமைந்துள்ளது. இந்த ஒரு போட்டியில் 30 ரன்களைக் கடந்தால், டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய சரித்திரம் எழுதப்படும்.