துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தங்களுடைய வாழ்வா? சாவா? என்ற ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொண்டு விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
துபாயில் கடும் வெப்பம் நிலவி வருவதால் இந்த போட்டியில் இடம்பெற்ற வீரர்கள் அனைவருமே கடுமையாக தடுமாறி வருகிறார்கள். மேலும் பார்வையாளர்களும் வெயிலின் கொடுமையையும் மீறி இந்த போட்டியை கண்டு களித்து வருகிறார்கள்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தான் வீசிய முதல் ஓவரில் ஐந்து ஓயிடுகளை வீசினார். இதனால் கடும் வெப்பம் காரணமாக ஷமி உடலளவில் சோர்வடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த தருணத்தில் தான் கேப்டன் ரோகித் சர்மா, திடீரென்று 13 வது ஓவரின் போது மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதனால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பாகிஸ்தான் போன்ற முக்கியமான ஆட்டத்தில் மைதானத்தை விட்டு வெளியேறுவது என்றால் அவருக்கு உடல் நலத்தில் ஏதும் பிரச்சனை இருக்கலாம் என்ற ரசிகர்கள் இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவையும் ஏற்படுத்தியது என்று கருதினர்.
ஆனால் வெப்பம் காரணமாக ரோகித் சர்மா போகவில்லை என்றும் பீல்டிங் செய்யும் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக முதல் கட்ட செய்தி வெளியாகின. இதனால் இந்திய அணியின் கேப்டனாக கில் தான் செயல்பட்டார். பீல்டிங் செட் செய்வது, பௌலர்களை மாற்றுவது என அனைத்து பணியையும் கில் தான் மேற்கொண்டார்.
இந்த தருணத்தில் ஆட்டத்தின் 19 ஆவது ஓவரின் போது மீண்டும் ரோகித் சர்மா களத்திற்கு வந்தார். இதை அடுத்து கேப்டன் பணியை அவர் மேற்கொண்டார். பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் தான் 100 ரன்களை எட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியை 250 ரன்களுக்குள் சுருட்டினால் அது இந்தியாவின் வெற்றி வாய்ப்புக்கு பிரகாசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.