துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றியைப் பெற வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி தங்களது அணி வீரர்களை மிரட்டி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் பாகிஸ்தான் அணி இன்று இந்தியாவை எதிர்கொள்கிறது. முதல் லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோற்றதால், எஞ்சியிருக்கும் 2 போட்டிகளிலும் வெற்றியைப் பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும்.

இந்தியாவை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு எதிராக தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. இதனால் இன்றைய ஆட்டமும் ஒரு தலைப்பட்சமாக இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் துபாயில் பாகிஸ்தான் அணி வீரர்கள் வலை பயிற்சி ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் வீரர்களை சந்தித்த அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நகவி, இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றியை பெற வேண்டும் என எச்சரித்து இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் பல அதிரடி நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மோஷின் நக்வியின் இந்த பேச்சு பாகிஸ்தான் வீரர்களை அதிருப்தி அடைய செய்திருக்கிறது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய "இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் எப்போதுமே சிறந்ததாக இருக்கும். எங்கள் அணி வீரர்கள் இந்த போட்டிக்காக சிறந்த முறையில் தயாராகி இருக்கிறார்கள். எங்கள் வீரர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள். எங்கள் அணி வெற்றி பெற்றாலும் தோற்றாலும் நாங்கள் அவர்களுடன் என்றும் நிற்போம் என்று கூறியிருக்கிறார்."
தற்போது பாகிஸ்தான் அணி அரையிறுதி செல்ல வேண்டும் என்றால் இந்திய அணி எஞ்சி இருக்கும் இரண்டு போட்டிகளிலும் தோற்க வேண்டும். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அவர்கள் எஞ்சி இருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். மேலும் பாகிஸ்தான் அணியில் ரன் ரேட் அதிகமாக இருக்க வேண்டும். இதனால் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இன்றைய ஆட்டம் ஒரு நாக் அவுட் போட்டி போல்தான் இருக்கும்.