அகமதாபாத் : இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற சில நிமிடம் முன்பு வரை அஸ்வின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.
அஸ்வின் இந்தப் போட்டியில் ஆட வாய்ப்பே இல்லை என கூறப்பட்ட நிலையில், அஸ்வின் போட்டிக்கு முன் தீவிர பயிற்சியில் இருந்ததால் சிறிது நேரம் பரபரப்பு எழுந்தது.
அவர் பாகிஸ்தான் போட்டியில் ஆடப் போகிறாரா? என சிலர் இந்த தகவலை பரப்பத் துவங்கினர். ஆனால், டாஸ் போட்ட பின் ரோஹித் சர்மா அணியை அறிவித்த போது அதில் அஸ்வின் பெயர் இடம் பெறவில்லை.

அப்புறம் ஏன் அஸ்வின் இப்படி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டார்? அதற்கு நேரலையில் கிரிக்கெட் விமர்சகர்கள் ஒரு முக்கிய காரணத்தை கூறினார்கள்.
பொதுவாக கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளுமே போட்டிக்கு முன் தங்கள் அணியை அறிவிக்காமல் டாஸ் போடும் முன் தான் அறிவிப்பார்கள். அதற்கு முக்கிய காரணம் யார் யார் ஆடப் போகிறார்கள்? என தெரிந்து விட்டால் எதிரணி அதற்கு ஏற்ப தங்கள் அணியை தயார் செய்யும். அதை தவிர்க்கவே இப்படி செய்வார்கள்.
இப்போது அஸ்வின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டால் அவர் போட்டியில் ஆடுவது போன்ற பிம்பம் ஏற்படும். அதை பாகிஸ்தான் அணி நம்பினால் தங்கள் அணியில் கடைசி நிமிட மாற்றம் செய்யவும் வாய்ப்பு உள்ளது. அல்லது அது கடைசி நிமிடங்களில் சிறிய பதற்றத்தை அளிக்கவும் வாய்ப்பு உள்ளது.

அதற்காகவே அஸ்வின் இவ்வாறு செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அஸ்வின் இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது புதிது அல்ல. சில சமயம் வலைப்பயிற்சியில் வேகப் பந்துவீச்சாளர் போல பந்து வீசுவது. லெக் ஸ்பின் வீசுவது போன்ற வித்தியாசமான வித்தைகளை செய்து காட்டி அனைவரையும் குழப்பி விடுவார்.
அதே போன்ற சம்பவம் தான் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்பும் நடந்துள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைதேர்வு செய்தது. அகமதாபாத் ஆடுகளம் சேஸிங் செய்ய ஏற்றது என்பதால் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.