மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் சீனியர் வீரர்கள் யாரும் இடம் பெறாத நிலையில் டெஸ்ட் தொடருக்கு விராட் கோலி ரோகித் சர்மா பும்ரா போன்ற வீரர்கள் திரும்பினர்.
கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சீனியர் வீரர்கள் இல்லாமல் இளம்படை டி20 மற்றும் ஒருநாள் தொடரில் எப்படி விளையாட போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த தொடர் ஒரு பிளாக்பஸ்டர் ஆக இந்திய கிரிக்கெட் அணிக்கு அமைந்திருக்கிறது.

டி20 தொடரில் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு போட்டியில் இந்தியா வெற்றியும் ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றியும் என அந்த தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதேபோன்று மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் அபாரமாக வெல்ல தென்னாபிரிக்க அணி ஆறுதல் வெற்றியை பெற்றது.
தற்போது டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்காவும் இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனில் முடிந்திருக்கிறது. ஒரு போட்டி மழையால் ரத்தானதால் மொத்தம் ஏழு போட்டிகள் நடைபெற்றது. இதில் நான்கில் இந்தியா வெற்றியும், மூன்றில் தென்னாப்பிரிக்கா வெற்றியும் பெற்றிருக்கிறது. இதன் மூலம் அந்நிய மண்ணில் சென்று தென்னாபிரிக்காவை இந்தியா மூன்று வகையில் ஆன கிரிக்கெட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது.

இந்தத் தொடரில் பல நல்ல விஷயங்களும் நடந்து இருக்கிறது. குறிப்பாக பவுலிங்கில் ஆர்ஸ்தீப் சிங் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முகேஷ் குமார் , ஆவேஷ் கான் ஆகியோர் வெள்ளை நிற பந்து கிரிக்கெட் தொடர்களில் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார்கள். ரிங்கு சிங் என்ற அதிரடி வீரர் எதிர்கால நட்சத்திரமாக இந்த தொடரில் நமக்கு தென்பட்டு இருக்கிறார். இதேபோன்று ஒரு நாள் தொடரில் வாய்ப்புக்காக காத்திருந்த சஞ்சு சாம்சன் முதல் முறையாக சதம் அடித்து அசத்தி இருக்கிறார்.
டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் பேட்டிங் மற்றும் கேப்டன்சி பாராட்டத்தக்கும் வகையில் இருந்தது. இதேபோன்று தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார். இதனால் இந்த ஒட்டுமொத்த தொடருமே ஒரு பிளாக்பஸ்டர் தொடராக தான் இந்தியாவுக்கு அமைந்திருக்கிறது.