கேப் டவுன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்கள் ஆட்டமிழக்க இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 153 ரன்களில் சுருண்டது.
இதனை அடுத்து 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் மீண்டும் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆட்டம் இழக்க 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை இந்தியா சமன் செய்தது. இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா இதை ஒரு மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். முதல் டெஸ்டில் நாங்கள் தோல்வி அடைந்தும் அதிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம். தற்போது இரண்டாவது டெஸ்டில் எங்களுடைய பவுலர்கள் பிரமாதமாக செயல்பட்டார்கள். எங்களுடைய வீரர்கள் பல பிளான்களை போட்டு அதற்கான பரிசுகளை தற்போது பெற்றிருக்கிறார்கள்.
எங்களை நம்பி நாங்கள் விளையாடினோம். முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற நினைத்தோம். ஆனால் கடைசி ஆறு விக்கெட் இழந்த விதம் நிச்சயம் வருத்தத்தை கொடுத்தது. இந்த போட்டி மிகவும் குறுகிய போட்டியாக தான் இருக்கும் என நினைத்தோம். இதனால் ஒவ்வொரு இன்னிங்சும் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்தோம். இந்த போட்டியில் முன்னிலை பெறுவது என்பது மிகவும் முக்கியமாக இருந்தது.
சிராஜ் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் செயல்பட்ட விதம் ஸ்பெஷலானது. இதை நாம் தினம் தினம் பார்க்க முடியாது. நாங்கள் இந்த போட்டியை சிம்பிளாக தான் எதிர்கொண்டோம். ஆடுகளமும் எங்களுக்கு நன்றாக ஒத்துழைத்தது. எங்களுடைய பவுலர்கள் சிராஜ், பும்ரா, முகேஷ் மற்றும் பிரசித் கிருஷ்ணா என அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்னாப்பிரிக்காவுக்கு யார் வந்தாலும் இது கடும் சவால்களை கொடுக்கும் ஆடுகளமாக இருக்கிறது. இந்தியாவுக்கு வெளியே தற்போது நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். இதனை நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த தொடரை நாங்கள் வென்று இருக்க முயற்சி செய்தோம். ஆனால் தென்னாப்பிரிக்கா உண்மையிலேயே சிறந்த அணி.
அவர்கள் கடும் சவால்களை எங்களுக்கு கொடுத்தார்கள். ஒரு நல்ல அணியை எதிர்கொண்டு தொடரை சமன் செய்தது திருப்தி அளிக்கிறது. டீன் ஏல்கார் தென்னாபிரிக்க அணியின் மிக முக்கியமான வீரராக இருந்தார். அவருடைய ஓய்வு வாழ்க்கை சிறந்ததாக அமைய நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரோகித் சர்மா கூறி விடை பெற்றார்.