இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் 11.. காஷ்மீர் வீரருக்கு வாய்ப்பு.. ரோஹித், கோலி இடம் உறுதியா?
திருவனந்தபுரம்: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர், திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. சுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில், நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் சர்வதேச களத்திற்குத் திரும்ப உள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஜப்பான் சென்றுள்ளதாலும், ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியுள்ளதாலும் இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்க, 3-வது இடத்தில் விராட் கோலி ஆட உள்ளார். இந்த மூன்று இடங்களிலும் எந்த மாற்றமும் இல்லை.

ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாததால் 4-வது இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் 5-வது இடத்தில் களமிறங்குவார். மாற்று பேட்டர்களான துருவ் ஜூரெல் மற்றும் நமன் திர் ஆகியோர் பெஞ்சில் அமர வைக்கப்படலாம்.
ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் இளம் புயல் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் அணியை பலப்படுத்துவர். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்தில் குர்னூர் பிரார் விளையாடுவாரா அல்லது முதன்முறையாக இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ள காஷ்மீர் பந்துவீச்சாளர் ஆகிப் நபிக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முக்கிய பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் செயல்படுவர். குல்தீப் யாதவ் இந்திய அணியில் ஒதுக்கப்படுவதாக விமர்சனம் இருக்கும் நிலையில் இந்த தொடர் அவருக்கு தன்னை நிரூபிக்க சிறந்த வாய்ப்பாக அமையும். பும்ரா இல்லாத நிலையில் வேகப் பந்துவீச்சு எப்படி இருக்கிறது? என பரிசோதனை செய்யவும் இந்த தொடர் முக்கிய வாய்ப்பாக இருக்கும்.
இந்திய உத்தேச பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, குர்னூர் பிரார் / ஆகிப் நபி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.


Click it and Unblock the Notifications

