IND vs WI 2வது ஒருநாள் போட்டி பிளேயிங் 11.. இந்திய அணியில் ருதுராஜ், நமன் திர்க்கு மீண்டும் வாய்ப்பு
குவஹாத்தி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது ஒருநாள் போட்டியில் குவஹாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க மைதானத்தில் விளையாட உள்ளது. இந்த தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் இந்திய அணி, வெற்றி பெற்ற அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்குமா அல்லது ஆடுகள சூழலுக்கு ஏற்ப வீரர்களை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க வரிசையில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்குவர். கடந்த போட்டியில் 32 ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் அடிக்கும் முனைப்பில் உள்ளார். 3வது இடத்தில் கடந்த போட்டியில் 139 ரன்கள் குவித்து அதிரடி ஆட்டம் ஆடிய விராட் கோலி அணியில் தொடர்வார்.

ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில், 4வது இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு பெறுவார். மிடில் ஆர்டரில் அனுபவ வீரர் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்த ரவீந்திர ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் நமன் திர் ஆகிய 3 ஆல்ரவுண்டர்கள் களமிறங்க வாய்ப்புள்ளது. இது இந்திய அணியின் 8வது வரிசை வரை பேட்டிங் பலத்தை உறுதி செய்கிறது.
பந்துவீச்சில் முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய குல்தீப் யாதவ் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக தொடர்வார். வேகப்பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் பிரார் ஆகியோர் இடம்பெறுவர்.
இந்திய உத்தேச லெவன் அணி விவரம்: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், நமன் திர், ரவீந்திர ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி, குர்னூர் பிரார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.


Click it and Unblock the Notifications

