IND vs WI: இந்திய அணிக்கு எதிராக கருப்பு பட்டை அணிந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.. என்ன காரணம்?
டெல்லி: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்தப் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் தங்களது கைகளில் கருப்புப் பட்டை அணிந்து களமிறங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தங்கள் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்கள் இந்த மரியாதையைச் செய்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரும், 1975 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பையை வென்ற அணியில் முக்கியப் பங்கு வகித்தவருமான பெர்னார்ட் ஜூலியன், கடந்த வாரம் தனது 75வது வயதில் காலமானார். அவரது மறைவுக்குத் துக்கம் அனுசரிக்கும் வகையிலும், கிரிக்கெட் உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை மதிக்கும் வகையிலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆடினர். டாஸ் நிகழ்வின்போது பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ், இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

யார் இந்த பெர்னார்ட் ஜூலியன்?
1950 ஆம் ஆண்டு டிரினிடாட் மற்றும் டோபாகோவில் பிறந்த பெர்னார்ட் ஜூலியன், 70களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒரு தவிர்க்க முடியாத ஆல்-ரவுண்டராகத் திகழ்ந்தார். வலது கை பேட்ஸ்மேனான இவர், இடது கையில் வேகப்பந்து வீசுவது மட்டுமின்றி, தேவைப்படும்போது சுழற்பந்தும் வீசக்கூடிய தனித்துவமான திறமையைக் கொண்டிருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 866 ரன்களையும் 50 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும், 12 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். அதில் 1975 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையும் அடங்கும்.
உலகக் கோப்பை நாயகன்
பெர்னார்ட் ஜூலியனின் கிரிக்கெட் பயணத்தில் மிக முக்கிய மைல்கல்லாக அமைந்தது 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை. அந்தத் தொடரில் அவர் பந்துவீச்சில் காட்டிய ஆதிக்கம், வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தது.
இலங்கைக்கு எதிராகவும், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு உறுதுணையாக இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், பேட்டிங்கில் முக்கியமான 26 ரன்களைச் சேர்த்ததோடு, பந்துவீச்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
அவரது மறைவுக்கு கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "பெர்னார்ட் ஜூலியன், 1975 உலகக் கோப்பையின் மாபெரும் ஜாம்பவான்களில் அவரும் ஒருவர்" என்று புகழாரம் சூட்டியுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசியது. இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின் போது 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களை எடுத்து இருந்தது.


Click it and Unblock the Notifications