
இந்திய அணியில் யார் யார்?
முன்னதாக, இந்திய அணியில் இன்று ரிஷப் பண்ட் தன் முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அவரது அறிமுகம் இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு வலு சேர்க்கும். மற்றபடி, இந்திய அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறவில்லை. சுழற்பந்துவீச்சுக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் சாஹல் உள்ளனர். வேகப்பந்துவீச்சுக்கு ஷமி, உமேஷ் யாதவ், கலீல் அஹ்மது ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அறிமுகம்
வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை, இரண்டு வீரர்கள் முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். அதிக அனுபவ வீரர்கள் அற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி என்ன செய்யப் போகிறது என்ற சந்தேகமே பலருக்கும் இருந்தது. எனினும் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்
டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சந்திரபால் ஹேமராஜ் மற்றும் கீரன் போவெல் துவக்கம் அளித்தனர். இன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஹேமராஜ் 9 ரன்களில் ஷமி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து தெறிக்கவிட்ட போவெல் 36 பந்துகளில் தன் ஒன்பதாவது அரைசதத்தை எட்டி, 51 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து சாமுவேல்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும், ஹோப் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து ஹெட்மையர் அதிரடியாக ஆடி 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடித்து சதம் கடந்து ஆட்டமிழந்தார். விக்கெட்கள் வீழ்ந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக ரன் குவித்தது இந்தியா பந்துவீச்சில் தடுமாறியது. ஷமி, ஜடேஜா பந்துவீச்சில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் கலீல் அஹ்மது 1, சாஹல் 3, ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இந்தியா எளிதாக வெற்றி
323 ரன்கள் இலக்கை துரத்தத் துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, தவான் துவக்கம் அளித்தனர். தவான் 4 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து ரோஹித், கோலி இணைந்து அதிரடியாக 246 ரன்கள் குவித்தனர். கோலி அதிரடியாக ஆடி தன் 36வது சதத்தை பூர்த்தி செய்து 140 ரன்களில் வெளியேறினார். அம்பதி ராயுடு 22, ரோஹித் சர்மா 152 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 42.1 ஓவர்கள் முடிவில் 326 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications
