IND vs WI: இந்தியா மெகா வெற்றி.. மேட்ச்சை முடித்த சிராஜ், ஜடேஜா.. வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸ் தோல்வி
அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் இந்த மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
அடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியா, இரண்டாவது நாளின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்து இருந்தது. இந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனால், 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்தது. 300 ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை வெஸ்ட் இண்டீஸ் அணி தவிர்க்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஜடேஜாவின் சுழலில் சிக்கிய விண்டீஸ்
ஆனால், மிகவும் மோசமாக பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 46 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. மூன்றாவது நாள் உணவு இடைவேளையின்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பின்னர் இந்திய அணி வேகமாக விக்கெட்களை சாய்த்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சார்பில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முகமது சிராஜ் 3, குல்தீப் யாதவ் 2, வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் இன்னிங்ஸ் வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து இருந்தார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருந்தார். அதே போல முகமது சிராஜ் முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி மீது பெருமளவில் ஆதிக்கம் செலுத்தினர். கே எல் ராகுல் 100 ரன்களும், துருவ் ஜுரல் 125 ரன்கள் அடித்தது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்களை எட்ட முக்கிய காரணமாக இருந்தது.


Click it and Unblock the Notifications