
இந்தியா ரன் குவிப்பு
இன்றும் இந்திய பேட்ஸ்மேன்கள் விளாசித் தள்ளினர். கோலி சதம் அடித்தார். இது கோலியின் 24வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் டி20 போட்டி போல ஆடி வந்த ரிஷப் பண்ட் 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் விளாசி 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கோலி, பண்ட் இணை 133 ரன்கள் குவித்தது. அடுத்து ஜடேஜாவும், கோலியும் இணைந்து 64 ரன்களுக்கு கூட்டணி அமைத்து ரன் குவித்தனர். கோலி 139 ரன்களுக்கு வெளியேறினார்.

ஜடேஜா அசத்தல்
அஸ்வின் 7 ரன்களில் வெளியேறி, பேட்டிங் பழகும் வாய்ப்பை தவறவிட்டார். அடுத்து குல்தீப் 12, உமேஷ் யாதவ் 22 வெளியேறினர். விக்கெட்கள் வேகமாக பறிபோவதை பார்த்த ஜடேஜா சரமாரியாக சிக்ஸர்கள் விளாசி தன் ரன் வேகத்தை கூட்டினார். அடுத்து இது போன்ற எளிதாக ரன் குவிக்கும் வாய்ப்பு எப்போது கிடைக்குமோ தெரியாது என்பதால் பந்தை பறக்க விட்டார்.

சொந்த மைதானத்தில் சதம்
இறுதியில் சுமார் ஒன்பது வருடம் கழித்து தன் முதல் சர்வதேச சதத்தை எட்டினார் ஜடேஜா. அதுவும் தன் சொந்த மாநில கிரிக்கெட் மைதானத்தில் சதம் கிடைத்துள்ளது. அவர் சதம் அடித்த உடன் மைதானம் முழுவதும் ஆர்ப்பரித்தது. ஜடேஜா சதம் அடித்த உடன் இந்தியா 649 ரன்களோடு டிக்ளர் செய்து கொண்டது. வெறும் ஒன்றரை நாளில், 149.5 ஓவர்களில் 649 ரன்கள் என்பது பெரிய இன்னிங்க்ஸ் ரன்கள் தான். இந்தியாவுடைய ரன் ரேட் 4.33 ஆகும்.

பேட்டிங்கும் போச்சு
அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தன் பேட்டிங்கை துவக்கியது. 649 என்ற இமாலய ரன்களை இரண்டு இன்னிங்க்ஸ்கள் சேர்த்தால் கூட வெஸ்ட் இண்டீஸ் எடுக்காது என மற்றவர்கள் நினைத்தால் பரவாயில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களே அப்படி தான் நினைக்கிறார்களோ என்னவோ? பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தாத அந்த அணி, பேட்டிங்கிலும் சொதப்பியது. வெறும் 29 ஓவர்கள் இன்று பேட்டிங் செய்த அந்த அணி 94 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்தது. ஷமி 2, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications
