துபாய்: இந்திய மகளிர் அணி மாபெரும் வரலாற்று சாதனையை படைத்து இருக்கிறது. அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 370 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது. இதுவே மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இதற்கு முன் 358 ரன்கள் அடித்ததே இந்திய அணியின் அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோர் ஆக இருந்தது. அதை தற்போது இந்திய அணி முறியடித்து உள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இந்த நிலையில், இரண்டாவது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 370 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் ஜெமிமா ரோட்ரிகஸ் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்தார்.
ஜெமிமா நான்காம் வரிசையில் இறங்கி 91 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்தார். துவக்கம் அளித்த கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரித்திகா ராவல் முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தனர். மந்தனா 54 பந்துகளில் 73 ரன்களும், பிரித்திகா ராவல் 61 பந்துகளில் 67 ரன்களும் எடுத்தனர்.
மூன்றாம் வரிசையில் இறங்கிய ஹர்லின் தியோல் 84 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார். ஹர்லின் தியோல் மற்றும் ஜெமிமா ரோட்ரிகஸ் மூன்றாவது விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தனர். இதை அடுத்து இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 370 ரன்கள் சேர்த்தது. அயர்லாந்து அணி 23 ரங்களை வைடுகள் மூலம் விட்டுக் கொடுத்தது.
இதற்கு முன் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு 2 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது. அதுவே மகளிர் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆக இருந்தது. அந்த சாதனையை தற்போது இந்திய அணி முறியடித்து இருக்கிறது.