பார்படாஸ்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் கடைசியாக ஆடிய 17 ஒருநாள் போட்டிகளில் ஒரு முறை கூட அரைசதம் அடிக்காதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இன்னும் 2 மாதங்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து மேற்கொண்டு வருகிறது. அதேபோல் அனைத்து நாடுகளும் உலகக்கோப்பைத் தொடருக்கான தயாரிப்பு பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதனால் நாளுக்கு நாள் உலகக்கோப்பை தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க இதுவே கடைசி தொடர் என்பதால், இந்திய ரசிகர்களின் கவனம் இந்த தொடர் மீது குவிந்துள்ளது. அதேபோல் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகிய மூவரில் யார் பேக் அப் வீரர்களாக தேர்வு செய்யவும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஆனால் சூர்யகுமார் யாதவ் களமிறங்கிய இரு போட்டிகளிலும் 19 மற்றும் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடருக்கு முன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆடிய 3 போட்டிகளில் மூன்றிலும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். சமீபத்திய ரெக்கார்ட் தான் இப்படி இருக்கிறது என்று பார்த்தால், சூர்யகுமார் கடைசியாக ஆடிய 17 ஒருநாள் போட்டியில் ஒன்றில் கூட அரைசதம் அடிக்கவில்லை.
மொத்தமாக ஒருநாள் போட்டிகளில் ஆடிய 23 இன்னிங்ஸ்களில் முதல் 6 போட்டிகளில் மட்டுமே சிறந்த ஆட்டத்தை சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தியுள்ளார். பிளாட் டிராக்குகளில் சிறப்பாக விளையாடும் சூர்யகுமார் யாதவ், கொஞ்சம் பந்து ஸ்விங்கானால் சுழற்பந்துவீச்சாளர்களிடம் எளிதாக விக்கெட்டை பறிகொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் சூர்யகுமார் யாதவ் அதிகமுறை விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இந்தியாவில் உலகக்கோப்பை நடப்பதால், அனைத்து அணிகளும் 2 ஸ்பின்னர்களுடன் நிச்சயம் களமிறங்குவார்கள். இதனால் சூர்யகுமார் யாதவை இந்திய அணிக்கு தேர்வு செய்வது, சொந்த காசில் சூனியம் வைப்பது போல் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.