ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் தோளில் கைபோட்டு ரசிகை ஒருவர் அன்பை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் பிரபல ட்ரினிடாட் மைதானமான போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலி அசத்தலான சதத்தால் 438 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்துள்ளது. இதனால் ஆட்டம் டிராவில் முடியுமோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனிடையே ட்ரினிடாட் மக்கள் இந்திய வீரர்கள் காண ஆவலுடன் மைதானம் வருகின்றனர்.

நேற்று விராட் கோலியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோஷ்வா சில்வாரின் தாய் கரோலின், ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்தியது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. விராட் கோலியும் தனது மகன் தான் என்று ஜோஷ்வா சில்வா தாய் கூறியது இந்திய ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. சச்சினை போல் கடல் கடந்தும் விராட் கோலியை ரசிகர்கள் கொண்டாடி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, உள்ளூர் டென்னிஸ் பால் கிரிக்கெட் வீராங்கனையை சந்தித்துள்ளார். ரோகித் சர்மாவை பார்த்த மகிழ்ச்சியில் அவர் மீது தோளில் கைப்போட்டு கொண்டு நடந்துகொண்டே பேசி அன்பை வெளிப்படுத்தினார். அதேபோல் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்று அவர் கூறியுள்ளார்.

நேற்று விராட் கோலி வீடியோ வெளியான பின், அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதான் விராட் கோலி மாஸ் என்று கூறினர். தற்போது ரோகித் சர்மா தனது ரசிகையை சந்தித்த வீடியோ வெளியாகி இருப்பதால், சமூக வலைதளங்களில் இரு தரப்பு ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.