சென்னை: 2024ஆம் ஆண்டில் இந்திய அணி பங்கேற்கவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்கள் பற்றிய முழு விவரங்களையும் பார்க்கலாம்.
2023ஆம் ஆண்டு இந்திய அணிக்கு சோதனையான காலகட்டமாகவே அமைந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி, உலகக்கோப்பை தோல்வி ஆகியவற்றால் இந்திய அணி வீரர்களும், ரசிகர்களும் துவண்டு போயுள்ளனர். இருப்பினும் புத்தாண்டில் புத்துணர்ச்சி பெற்று இந்திய அணி மீண்டும் கோப்பைகளை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு இந்திய அணி விளையாடவுள்ள டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் தொடர்கள் மற்றும் டி20 தொடர்கள் குறித்த முழு விவரங்களும் வெளி வந்துள்ளன. அதன்படி பார்த்தோமானால், 2024ஆம் ஆண்டு மட்டும் இந்திய அணி மொத்தமாக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.
அதன்பின் ஜனவரி மாதத்தில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. அதன்பின் ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி தொடங்கவுள்ளது.
அதன்பின்னர் மார்ச் 22ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் நடக்கவுள்ள நிலையில், மே மாதம் 23ஆம் தேதி இறுதிப்போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் ஜூன் 4ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன்பின் ஆகஸ்ட் மாதம் வழக்கம் போல் ஓய்வில் இருக்கும் இந்திய அணி, செப்டம்பர் மாதம் வங்கதேச அணியுடன் 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.
அதன்பின் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. அதன்பின் இந்திய ரசிகர்களிடையே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபிக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.