மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. டி20 உலக கோப்பை தொடரில் டிராவிட் பயிற்சியாளராக தனது பதவியை நிறைவு செய்கிறார். மீண்டும் அந்த பதவிக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பிக்கவில்லை.
இதனால் புதிய பயிற்சியாளர் யார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கம்பீர் புதிய பயிற்சியாளர் பதவிக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் தோனி அடுத்த பயிற்சியாளராக வருவாரா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தோனியே நினைத்தாலும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆக முடியாது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய அணியின் பயிற்சியாளராக வரக்கூடிய தகுதி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடாமல் இருந்திருக்க வேண்டும்.
தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு தான் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் தோனியால் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது. அது மட்டும் அல்லாமல் தோனி இன்னும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தான் பிசிசிஐ யின் மற்ற பொறுப்புகளில் ஒரு வீரரால் பதவி ஏற்க முடியும்.
இதனையும் பார்க்கும்போது தோனியே நினைத்தால் கூட தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வர முடியாது என தெரிகிறது. இந்த சூழ்நிலையில் தோனி கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் மென்டராக பணிபுரிந்தார். இதற்காக அவர் எந்த ஊதியமும் அவர் வாங்கவில்லை.
இதனால் தோனி விதிகளின்படி பயிற்சியாளராக முடியாது. ஆனால் பிசிசிஐ நினைத்தால் தோனியை மென்டராக பணியாற்ற வைக்க முடியும். எனினும் கம்பீரும் தோனியும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பார்களா என்பது இங்கு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இதனால் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர்தான் தற்போது முதன்மை நபராக இருக்கிறார் என்று தகவல் வெளியாகிறது.