மும்பை : இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை தொடர்ந்து ஓய்வே இல்லாமல் விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள்.
இதன் காரணமாக வீரர்களுக்கு ஓய்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக சுழற்சி முறையில் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. கடந்த டி20 உலக கோப்பை பிறகு நவம்பர் மாதம் நியூசிலாந்து சுற்றுப்பயணம்.

டிசம்பர் மாதம் வங்கதேசம் சுற்றுப்பயணம், ஜனவரி மாதம் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் தொடர், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஐபிஎல் தொடர் என தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணி வீரர்கள் தற்போது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றிருக்கிறார்கள்.
கடந்த ஆறு ஏழு மாதமாக தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் விளையாடிக் கொண்டு வரும் நிலையில், தற்போது அவர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு கிடைக்க இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் ஒரு நாள் தொடரில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தத் தொடர் ஒத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ஜூன் 12-ம் தேதியிலிருந்து ஜூலை 11ஆம் தேதி வரை இந்திய அணி வீரர்கள் எந்த தொடரிலும் விளையாட மாட்டார்கள். இதனால் அவர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு கிடைக்க உள்ளது. இனி ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரில் தான் இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர். நடப்பாண்டில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால் இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வும் தேவைப்படுகிறது. ஆனால் ஜூலை மாதத்தில் இருந்து உலகக் கோப்பை வரை இந்திய அணி தொடர்ந்து கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.