அம்பயர் டெரைல் ஹார்ப்பர் சரியில்லை-இந்திய வீரர்கள் புகார்

மூன்றாவது போட்டியிலும் ஹார்ப்பர்தான் நடுவராக செயல்படவுள்ளார். ஆனால் அவர் அப்போட்டியில் நடுவராகப் பணியாற்றக் கூடாது என்று தாங்கள் பிரார்த்திப்பதாக இந்திய அணியின் மூத்த வீரர் ஒருவர் எரிச்சலுடன் கூறினார்.
ஹார்ப்பர் குறித்து கேப்டன் டோணி கூறுகையில், ஹார்ப்பர் சில சரியான முடிவுகளை எடுத்திருந்தால் போட்டி முன்கூட்டியே முடிந்திருக்கும். இந்தியாவும் பெரும் வெற்றி வித்தியாசத்தை எட்டியிருக்கும். நாங்களும் இந்நேரம் ஹோட்டலில் ஓய்வில் இருந்திருப்போம் என்றார்.
அணியின் மூத்த வீரர் ஒருவர் கூறுகையில், 3வது போட்டிக்கு தயவு செய்து ஹார்ப்பர் வரக் கூடாது என்று பிரார்த்திக்கிறோம். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. ஒட்டுமொத்த இந்திய அணியும் ஹார்ப்பரின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ளது என்றார் அவர்.
இந்தியாவுக்கு பாதகமாக 3 தவறுகளையும், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சாதகமாக 3 தவறுகளையும் ஹார்ப்பர் செய்தார் என்று இந்திய அணியினர் குற்றம் சாட்டுகின்றனர். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், டோணி ஆகியோரை அவுட் செய்த விதம் தவறானது. அதேபோல பிரேவோவுக்கு இரண்டு முறையம், சந்தர்பாலுக்கு ஒருமுறையும் சாதகமாக நடந்து கொண்டார் ஹார்ப்பர் என்று இந்திய வீரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ரெய்னாவுக்கு கொடுக்கப்பட்ட எல்பிடபிள்யூ தவறு என்பது பின்னர் தெரிய வந்தது. அதேபோல அதேபோல ஹர்பஜன் சிங்கையும் தேவையே இல்லாமல் எல்பிடபிள்யூ ஆக்கினார் ஹார்ப்பர்.
அதேபோல கேப்டன் டோணிக்கு பிஷூ போட்டது நோபால் என்று நன்கு தெரிந்தும் கூட அந்தப் பந்தை அனுமதித்தார் ஹார்ப்பர். அந்தப் பந்தை டோணி அடித்து அது கேட்ச் ஆகி அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த கூத்துக்கள் அனைத்தும் இந்தியாவின் 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது நடந்ததாகும்.
இந்தப் போட்டித் தொடரில் யுடிஆர்எஸ் எனப்படும் நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் முறை அமல்படுத்தப்படவில்லை. இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக இந்த முறை அமலாகவில்லை. ஆனால் அதுவே தற்போது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்து விட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்து தொடங்கவுள்ள இங்கிலாந்து போட்டித் தொடரிலும் கூட யுடிஆர்எஸ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, June 6, 2012, 16:49 [IST]
Other articles published on Jun 6, 2012


Click it and Unblock the Notifications