ஜலந்தர் : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் ரூ.7 கோடி மதிப்பில் கட்டியுள்ள பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய கிரிக்கெட்டின் சுழல் ஜாம்பவான் ஹர்பஜன் சிங். இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளையும், 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 28 டி20 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர். அதேபோல் பேட்டிங்கிலும் ஒட்டுமொத்தமாக சேர்த்து சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை விளாசியுள்ளார்.

அதேபோல் ஐபிஎல் தொடரிலும் மும்பை, சிஎஸ்கே மற்றும் கேகேஆர் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். ஓய்வுக்கு பின் வர்ணனையாளர், சினிமா, அரசியல் என்று பன்முகத்தன்மையுடன் பணியாற்றி வரும் ஹர்பஜன் சிங், சொந்த வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றங்களுடன் வாழ்ந்து வருகிறார்.
பஞ்சாப் நடிகையான கீதா பாஸ்ராவை திருமணம் செய்து கொண்டுள்ள ஹர்பஜன் சிங், தற்போது பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரில் ரூ.7 கோடிக்கு பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார். புதிய வீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெட் ரூம், ஹால் உள்ளிட்ட புகைப்படங்களை ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார். அதில், ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள ஓய்வறை புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.
அதில் ஹோம் தியேட்டர் செட்டப்பில் டிவி, எல் வடிவிலான சோஃபா, டிவி-க்கு அருகில் ஒரு கிட்டார் மற்றும் சிஎஸ்கே வீரர்கள் கையெழுத்திட்ட பேட் ஆகியவை அந்த அறையில் இடம்பெற்றுள்ளது. தோனி மீது அதிகளவில் விமர்சனங்கள் இருந்தாலும், சிஎஸ்கே அணி மீதான அன்பை இதன் மூலம் ஹர்பஜன் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.
அதேபோல் ஹர்பஜன் சிங் பயன்படுத்திய பேட், தொப்பு, பால், ஸ்டம்புகள் உள்ளிட்டவற்றை காட்சி பொருளாக வைக்க பிரத்யேக அறை கட்டப்பட்டுள்ளது. அதில் ஹர்பஜன் சிங் வென்றுள்ள விருதுகளும் இடம்பெற்றுள்ளன. இதுமட்டுமல்லாமல் வீட்டிற்கு வெளியில் வெர்டிகல் கார்டன் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, ஹர்பஜன் சிங் ரசனையான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.