இந்திய கிரிக்கெட் அணியின் ஆதிக்கம்.. ஆஸ்திரேலியா எல்லாம் தள்ளி நில்லு.. ரோகித் படையின் சாதனை
ICC Rankings : சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணி தற்போது நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மாபெரும் சாதனையினை படைத்திருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

எனினும் இந்திய அணி விசாகப்பட்டினம், ராஜ்காட், ராஞ்சி மற்றும் தர்மசாலா என அடுத்தடுத்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளிய இந்திய அணி 122 புள்ளிகள் உடன் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 117 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணி 11 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தற்போது நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றும் இந்தியாவின் தரவரிசை பட்டியலில் எந்த மாற்றமும் நிகழவில்லை. தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் இடத்தில்தான் இருக்கிறது. 121 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இந்தியாவும் , 118 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதேபோன்று சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் 266 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி முதல் இடத்திலும், 256 புள்ளிகள் பெற்றுள்ள இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. ரோகித் சர்மா தலைமையான இந்திய அணி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது இது முதல் முறை கிடையாது.
ஏற்கனவே செப்டம்பர் 2023 ஆம் ஆண்டிலிருந்து ஜனவரி 2024 ஆம் ஆண்டு வரை இந்திய அணி அனைத்து வித கிரிக்கெட் போட்டியிலும் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்த நிலையில் இந்தியா புள்ளிகளில் சரிந்தது. அதேசமயம் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானில் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்று வீழ்த்தியதால் அவர்கள் முதலிடத்திதை பிடித்திருந்தனர்.
இதுபோன்று டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பும்ரா முதலிடத்திலும், அஸ்வின் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் கில்லும், மூன்றாவது இடத்தில் விராட் கோலியும் நான்காவது இடத்தில் ரோகித் சர்மாவும் உள்ளனர். டி20 தரவரிசை பட்டியலில் சூரிய குமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதேபோன்று டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஜடேஜா முதலிடத்திலும் அஸ்வின் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications