இந்திய ஒருநாள் அணியில் 8 வீரர்கள் அதிரடி நீக்கம்.. மீண்டும் சேர்க்கப்பட்ட ஜடேஜா, சிராஜ், ஜெய்ஸ்வால்
மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வரும் செப்டம்பர் 27 முதல் திருவனந்தபுரத்தில் தொடங்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் அணியுடன் ஒப்பிடுகையில், தற்போதைய அணியில் 8 வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஒருநாள் அணிக்கு, ஆசிய விளையாட்டுப் போட்டிக்குச் சென்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக மூத்த விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஒருநாள் அணியில் இணைந்தவர்கள் (8 பேர்):
இங்கிலாந்து தொடரில் இடம்பெறாத முன்னணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளனர். இவர்களுடன் பஞ்சாப் அதிரடி பேட்டர் நமன் தீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி ஆகிய இரு புதிய முகங்களுக்கு முதன்முறையாக இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அணியில் இருந்து வெளியேறியவர்கள் (8 பேர்):
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதால் ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், சிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய 6 நட்சத்திர வீரர்கள் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. இவர்களுடன் இளம் வீரர்கள் ஹர்ஷ் துபே மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் ஒருநாள் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் இங்கிலாந்து தொடரில் விளையாடி இருந்தனர்.
இந்திய ஒருநாள் அணியில் தக்கவைக்கப்பட்டவர்கள் (7 பேர்):
ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் பிரார் ஆகிய 7 வீரர்கள் தங்களது இடத்தைத் தக்கவைத்துள்ளனர். 2027 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு இந்த மாற்றங்களைச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications

