விக்கெட் எடுத்த உடன் உணர்ச்சிவசப்பட்ட கலீல் அஹ்மது.. எச்சரிக்கை விடுத்த ஐசிசி
மும்பை : இந்திய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹ்மது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியின் போது எதிரணி வீரரை வழியனுப்பி வைத்ததாக கூறி எச்சரிக்கப்பட்டார்.
கலீல் அஹ்மது இந்திய அணியின் புதிய வரவாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து இடம் பெற்று வருகிறார்.
20 வயது இளம் வீரரான கலீல், தன் பந்துவீச்சால் அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்திய அணியில் நீண்ட காலம் பயணிப்பார் எனவும் கருதப்படுகிறது.

கோபமூட்டிய கலீல்
இந்த நிலையில், நான்காவது போட்டியில் மர்லான் சாமுவேல்ஸ் விக்கெட்டை எடுத்தவுடன் உணர்ச்சிவசப்பட்ட கலீல் அஹ்மது அவரை நோக்கி வேகமாக சென்றார். இதனால், சாமுவேல்ஸ் இதற்கு எதிர்வினை ஆற்றினார்.

விசாரணை நடந்தது
இப்படி எதிரணி வீரரை கோபமூட்டுவது ஐசிசி விதிகளின் படி விதிமீறல் ஆகும். இதையடுத்து, கலீல் அஹ்மதுவை போட்டி ரெப்ரீ கிறிஸ் பிராடு போட்டி முடிந்தவுடன் விசாரணைக்கு அழைத்தார். அங்கே தன் தவறை ஒப்புக்கொண்டார் கலீல் அஹமது.

முதல் நிலை விதிமீறல் தண்டனை
இதை அடுத்து கலீல் அஹ்மது முதல் நிலை விதிமீறல் செய்ததாக பதியப்பட்டுள்ளது. முதல் நிலை விதிமீறல் செய்தால், குறைந்தபட்சம் அதிகாரிகள் கண்டனம் செய்வார்கள், அதிகபட்சமாக போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். மேலும், ஒன்று அல்லது இரண்டு தடைப் புள்ளிகள் வழங்கப்படும். இரண்டு வருட காலத்துக்குள் நான்குக்கு மேல் தடைப் புள்ளிகள் பெற்றால் அவருக்கு போட்டித் தடை விதிக்கப்படும்.

இளம் வீரர் என்பதால்..
பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்கும் போது உணர்ச்சிவசப்படுவது வாடிக்கையான விஷயம் தான். அதிலும் கலீல் அஹ்மது போன்ற புதிய இளம் வீரர்கள் விக்கெட் வீழ்த்தும் போது சற்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இது போன்ற தேவையற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். கலீல் அஹ்மது நான்காவது ஒருநாள் போட்டியில் 5 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்களை விட சிறப்பாகவே செயல்பட்டார்.


Click it and Unblock the Notifications