இந்திய டி20 அணியில் புதிய ஆல்-ரவுண்டர் சேர்ப்பு.. சூர்யான்ஷ் ஷெட்கேவுக்கு வாய்ப்பு.. பின்னணி என்ன?
மும்பை: அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்திய அணியின் இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மும்பையைச் சேர்ந்த மற்றொரு இளம் ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே முதல் முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு நிதிஷ் குமார் ரெட்டிக்கு இடது தொடை தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் அவரது தசையில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவரை தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பிசிசிஐ மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால் அவர் அடுத்த 4 வாரங்களுக்கு போட்டிகளில் விளையாட முடியாது. ஹர்திக் பாண்டியாவும் காயம் காரணமாக பந்துவீச முடியாத சூழலில் இருப்பதால், நிதிஷ் ரெட்டி விலகியிருப்பது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, 23 வயதான சூர்யான்ஷ் ஷெட்கேவை மாற்று வீரராக பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஏ தொடரில் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக விளையாடிய சூர்யான்ஷ், 5 போட்டிகளில் 147 ரன்கள் குவித்ததோடு பந்துவீச்சிலும் 23 ஓவர்கள் வீசி அசத்தினார். மேலும், 2024-25 சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய அவர், 251.92 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டுடன் 131 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சிறப்பான செயல்பாடுகளுக்காக அவருக்கு தற்போது இந்திய தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், பின்னர் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி விளையாடும் முதல் டி20 தொடர் இதுவாகும். அயர்லாந்துக்கு எதிரான போட்டிகள் வரும் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் டப்ளினில் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் 11 வரை இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.


Click it and Unblock the Notifications
