Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின், ரோகித், கோலி.. 3 ஜாம்பவான்களை ரிட்டையராக வைத்ததே இவர்தான்.. ஆஸ்திரேலிய தொடரில் அழுத்தம்

மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் மூன்று ஜாம்பவான் வீரர்களை வரிசையாக வீழ்த்தி இருக்கிறார் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் என்று ஒரு பரபரப்பு தகவல் பரவி வருகிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது என்ன நடந்தது என்பது வெளி உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் அந்த ஒரே டெஸ்ட் தொடரின் போது அஸ்வின், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என மூன்று இந்திய டெஸ்ட் ஜாம்பவான்களை ஓய்வு பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

இந்திய டெஸ்ட் அணி கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் படுதோல்வியடைந்ததை அடுத்து ஆஸ்திரேலியாவுடன் விளையாடியது. அந்தத் தொடரின் போது, மூத்த வீரர்களான அஸ்வின், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்குச் சரியாகச் செயல்பட வேண்டும், ரன் குவிக்க வேண்டும் என்று அழுத்தம் இருந்தது.

Indian Cricket Team Gautam Gambhir Ravichandran Ashwin Rohit Sharma Virat Kohli

அஸ்வினுக்குப் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாது என்று தகவல் முன்பே கூறப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், அவர் இரண்டாவது போட்டியின் போது தான் ஓய்வு பெறப் போவதாக இந்திய அணி நிர்வாகத்திடம் அறிவித்தார். இதை அறிந்தவுடன் அவருக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தப் போட்டியில் அஸ்வின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதை அடுத்து, நான்காவது போட்டியில் தனக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது என்பதை அறிந்த நிலையில், அஸ்வின் அப்போதே ஓய்வை அறிவித்து நாடு திரும்பினார். அஸ்வினின் ஓய்வுக்கு என்ன காரணம், அதுவும் பாதி டெஸ்ட் தொடரிலேயே ஓய்வு தெரிவித்து வெளியேறுவதற்கு என்ன காரணம் எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அஸ்வின் இதுவரை வெளிப்படையாக எந்த பதிலையும் சொல்லவில்லை. அணி நிர்வாகத்தில் யாரேனும் அழுத்தம் கொடுத்தார்களா அல்லது மரியாதை குறைவான சம்பவங்கள் ஏதேனும் நடந்ததா என சமூக ஊடகங்களில் இது பற்றி அப்போது விவாதம் நடந்தது. பின்னர் அனைவரும் அந்தச் சம்பவத்தை மறந்து விட்டனர்.

இதை அடுத்து இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெற்றது. அதன் பிறகு ஐபிஎல் தொடர் நடைபெற்றது. அடுத்ததாக இந்திய டெஸ்ட் அணி மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருந்தது. அந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு வரை ரோகித் சர்மா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடப் போவதாகப் பேட்டிகளில் கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வமாக இருந்த ஒருவர் திடீரென ஓய்வு அறிவிக்கிறார் என்றால், பின்னணியில் என்ன நடந்திருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

அதே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அந்தத் தொடரிலும் அதற்கு முந்தைய தொடரிலும் ரோகித் சர்மா சரியாக ரன் குவிக்காததால், அவர் விலக வேண்டும் என ரசிகர்களும் கூறி வந்தனர். இந்த நிலையில் தான் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மட்டும் ரோகித் சர்மா அணியில் இருந்து விலகினார்.

அப்போதே அவர் ஓய்வு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது தான் மீண்டும் விளையாடுவேன் என அவர் அழுத்தம் திருத்தமாக விளக்கமளித்தார். அதைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விரும்பவில்லை என அப்போதே கூறப்பட்டது. ரோகித் சர்மா மற்றும் கௌதம் கம்பீர் இடையே அந்த விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், அதன்பின் இருவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒன்றாக இணைந்து செயல்பட்டு இந்திய அணிக்குக் கோப்பையையும் வென்று கொடுத்தனர். அதனால் எல்லாம் சரியாகிவிட்டது. அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவே கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஓய்வு அறிவித்து விட்டார்.

அடுத்து விராட் கோலி மட்டுமே மீதமிருந்தார். அவருக்கு வயது 36 தான் ஆகிறது என்பதால், அவர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார் என ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவர் தற்போது பிசிசிஐ-யிடம் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், விராட் கோலி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போதே சக வீரர்களிடம் தான் இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என அவ்வப்போது தெரிவித்திருக்கிறார். ஆனால் யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஏனெனில், விராட் கோலி தனது பேட்டிங் ஃபார்ம் சரியாக இல்லை என்பதால் இவ்வாறு பேசுகிறார் என மற்ற வீரர்கள் நினைத்து விட்டனர். ஆனால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது விராட் கோலிக்கு ஏதோ ஒரு வழியில் அழுத்தம் கொடுத்திருக்கிறது. அதனால் தான் அவர் அப்போதே தனது ஓய்வு முடிவை எடுத்திருக்கிறார்.

இந்த மூன்று ஓய்வு முடிவுகளையும் ஒப்பிட்டு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இவர்கள் மூவருக்கும் இனி வாய்ப்பு அளிக்கப்படாது என கூறி இருக்கலாம். அதன் காரணமாகவே இவர்கள் மூவரும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருகின்றனர் என கூறப்படுகிறது.

அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளில் 35 என்ற பேட்டிங் சராசரியில் ரன் சேர்த்து வரும் சுப்மன் கில் எப்படி கேப்டனாக இருக்க முடியும்? அவர் சரியாக ரன் குவிக்கவில்லை என்றால் அவரையும் அணியில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமே? என்ற கேள்வியையும் சில ரசிகர்கள் முன்வைத்து உள்ளனர்.

டெஸ்ட் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா ஓய்வு பெற்றாலும் அவரது இடத்தில் துவக்கம் அளித்து ஆட கே எல் ராகுல், அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதர்சன் என பல வீரர்கள் காத்திருப்பில் உள்ளனர். ஆனால், விராட் கோலியின் நான்காம் வரிசையில் யாரை பேட்டிங் செய்ய வைப்பது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என நினைத்து கம்பீர் இந்த மூன்று வீரர்களையும் வெளியேற்றி இருக்கலாம். ஆனால், ஒரே நேரத்தில் மூவரையும் வெளியேற்றியது சரியா?

Story first published: Sunday, May 11, 2025, 17:30 [IST]
Other articles published on May 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+