கொழும்பு: இந்திய ஏ அணிக்காக ஆடி வரும் இளம் வீரர் துருவ் ஜுரெல் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான போட்டியில், பட்லர் பரிசாக வழங்கிய விக்கெட் கீப்பிங் கிளவ்-வை பயன்படுத்தியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி மூலமாக கண்டறியப்பட்ட திறமை வாய்ந்த இளம் வீரர் துருவ் ஜுரெல். 11 இன்னிங்ஸ்களில் விளையாடிய ஜுரெல், ஃபினிஷராக களமிறங்கி 152 ரன்களை விளாசினார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரெல், இந்திய ஏ அணியில் இடம்பிடித்தார். இதையடுத்து வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய ஏ அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ஏ அணிக்கு விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் துருவ் ஜுரெல், அசாத்தியமான கேட்ச்களை பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். தேர்ந்த விக்கெட் கீப்பர்களை போல் துருவ் ஜுரெல்லும் செயல்பட்டு வருவதால், முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலும் துருவ் ஜுரெல்லை பயன்படுத்தலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஏ அணியை எதிர்த்து இந்தியா ஏ அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டிக்காக துருவ் ஜுரெல் பிரத்யேகமான விக்கெட் கீப்பிங் கிளவ்ஸை பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. ஐபிஎல் தொடரின் போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பட்லர், துருவ் ஜுரெல்லின் விக்கெட் கீப்பிங் திறமையை பார்த்து அவருக்கு கிளவ் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

அதனை முக்கியமான போட்டியில் பயன்படுத்த வேண்டும் என்று காத்திருந்த துருவ் ஜுரெல், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் பயன்படுத்தியுள்ளார். இந்த கிளவ் அணிந்துகொண்டு துருவ் ஜுரெல், 2 கேட்ச்களை மற்றும் ஒரு ஸ்டம்பிங்கை செய்து அசத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
வழக்கமாக எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பேட்டை மட்டுமே வீரர்கள் பரிசாக வழங்கி வந்த நிலையில், விக்கெட் கீப்பரான ஜுரெல்லுக்கு பட்லர் கிளவை பரிசு வழங்கியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.