ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா மும்பை இந்தியன்ஸ் அணி? ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று மோதல்!!
அகமதாபாத்: 8 வது ஐ.பி.எல். போட்டிகளில் இதுவரை 2 ஆட்டங்களில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியிலாவது வென்று ஹாட்ரிக் தோல்வியை மும்பை இந்தியன்ஸ் அணி தவிர்க்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
8-வது ஐ.பி.எல். போட்டியின் 8-வது லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

2 தோல்விகள்..
ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை மோதிய 2 ஆட்டத்திலும் தொடர்ந்து தோற்றது. கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் 18 ரன்களிலும் தோற்றது.

ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா?
அந்த அணியைப் பொறுத்தவரையில் இன்று ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் வீரர்களில் ரோகித்சர்மா, ஹர்பஜன்சிங் ஆகியோர் மட்டுமே நன்றாக ஆடி வருகிறார்கள். அம்பதி ராயுடு உள்பட மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை.

பிஞ்ச், பொல்லார்டு..
இதேபோல் ஆரோன் பிஞ்ச், பொல்லார்டு ஆட்டம் இன்னும் எடுபடவில்லை. இவர்கள் சிறப்பாக ஆடினால்தான் மும்பை இந்தியன்ஸ் அணியால் வெல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது.

2 வெற்றிகள்..
ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பை 26 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

ஹாட்ரிக் வெற்றி?
இன்றைய போட்டியில் மும்பையை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் அந்த அணி உள்ளது. கேப்டன் வாட்சனுக்கு கடந்த 2 ஆட்டங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஸ்மித் அணியை சிறப்பாக கொண்டு சென்று 2 வெற்றியை பெற்றார்.
ஸ்மித், ரகானே, பல்க்னெர், தீபக் ஹூடா, சவுத்தி ஆகியோர் தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியை எளிதில் எதிர்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications