ஆட்டம் கண்ட ஹைதராபாத்.. ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்திய உனத்கட்
ஹைதராபாத்: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி உனத்கட் சாதனை படைத்துள்ளார்.
ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற 44வது லீக் போட்டியில், புனே அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் குவித்தது.

புனே அணி பேட்டிங் சற்று சொதப்பினாலும் கூட பவுலிங்கிலும், பீல்டிங்கிலும் பிரித்து விட்டது. ஒரு அணியாக அத்தனை பேரும் ஒருங்கிணைந்து ஆடி அசத்தி விட்டனர். அதிலும் உனத்கட் பவுலிங் அபாரமாக இருந்தது. கடைசி ஓவரை வீசிய உனத்கட் ஹைதராபாத் அணியை நையப்புடைத்து விட்டார். 4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
கடைசி ஓவரில் 1 ரன் கூட கொடுக்காமல் ஹாட்ரிக் விக்கெட்டையும் சாய்த்தார். இது தவிர, டி-20 அரங்கில், தனது 100வது விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் உனத்கட். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் கடைசி ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காத வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடமும் பிடித்தார்.
இதற்கு முன்பு இர்பான் பதான் (2008), மலிங்கா (2009) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். குறிப்பாக பதான், உனத்கட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பத்ரி (பெங்களூரு), ஆண்டிரு டை (குஜராத்) ஆகியோரை தொடர்ந்து ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் உனத்கட். மேலும், ஐபிஎல் அரங்கில் இரண்டு முறை 5 விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் பால்க்னருக்கு அடுத்து 2வது இடம் பிடித்தார் உனத்கட்.
இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.


Click it and Unblock the Notifications