நான் பேச மாட்டேன்.. என் ரெக்கார்ட் பேசும்.. பெங்களூர் அணியை சீண்டிய கிங் கெயில்!
மொஹாலி: பெங்களூர் அணி ஏலத்தின் போது தன்னை எடுப்பதாக கூறி கடைசியில் கைவிட்டுவிட்டதாக பஞ்சாப் வீரர் கெயில் கூறியுள்ளார். தன்னை புறக்கணித்தவர்களுக்கு தன்னுடைய ஆட்டம் மூலம் பதில் அளித்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் பார்முடன் ஆடும் கிறிஸ் கெயில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார். தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் எல்லாவற்றிக்கும் பதில் அளித்துள்ளார்.
நான்கு போட்டிகளில் இரண்டில் அரைசதம், ஒன்றில் சதம் என்று மரண ஆட்டம் ஆடியுள்ளார். இனி வரும் போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என்று இவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. அவரது பேட்டியில் நிறைய வாழ்க்கை தத்துவங்களும் உள்ளது.

பஞ்சாப் அணி
பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அவர், தன்னுடைய புதிய அணி பற்றி கூறினார். அதில் ''கடைசியில் இந்த கிங், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு வந்துவிட்டேன். நான் யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பலர் என்னை பற்றி நினைத்ததை தவறு என்று நான் நிரூபிக்கவில்லை. ஆனால் என்னுடைய ஆட்டம் நிரூபித்து இருக்கிறது. ஏலத்தில் என்னை எடுக்காதவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. ஏனென்றால் கிரிக்கெட்டிற்கும் வெளியே, ஐபிஎல்லிற்கும் வெளியே ஒரு வாழ்க்கை இருக்கிறது'' என்றுள்ளார்.

ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் ஏலத்தில் செல்லாதது குறித்து பேசிய அவர் ''என்னை ஏன் ஐபிஎல் ஏலத்தில் கடைசி வரை எடுக்கவில்லை என்றே தெரியவில்லை. பஞ்சாப் கூட என்னை கடைசி வாய்ப்பாகத்தான் பார்த்தது.அந்த அறைக்குள் என்ன நடந்தது, ஏன் என்னை எடுக்கவில்லை என்பது எல்லாம் எனக்கு தெரியாது. அணியில் கூட கடைசியில்தான் எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் நான் இப்போது எப்படி ஆடுகிறேன் என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அதுபோதும் எனக்கு'' என்றுள்ளார்.

தத்துவம்
முக்கியமாக அவர் தனது முதுகில் இரண்டு வருடம் முன்பு ஏற்பட்ட காயம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் ''எனக்கு முதுகில் இரண்டு வருடம் முன்பு ஆப்ரேஷன் செய்தார்கள். அப்போதுதான் பார்ம் அவுட் ஆனேன். ஆனால் அதுவும் நல்லதுதான். ஒரு காயம் ஏற்படும் போதுதான், உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்க்கும் விதம் மாறும். நான் மாறினேன். நான் இப்போது என்னுடைய பேட்டிங் முறையை மாற்றி இருக்கிறேன். அதற்கு அந்த காயம்தான் காரணம்'' என்றுள்ளார்.

பெங்களூர் அணி
பெங்களூர் குறித்து பேசிய அவர் ''கடைசி வரை பெங்களூர் அணி என்னை எடுப்பதாக கூறினார்கள். நான் மீண்டும் பெங்களூர் அணிக்கு செல்வேன் என்றுதான் நம்பினேன், அவர்கள் கடைசியில் என்னை ஏமாற்றிவிட்டனர். ஆனால் அதற்காக அவர்கள் மீது கோபப்பட முடியாது. இப்போது எல்லாம் நன்றாக இருக்கிறது. பஞ்சாப் அணியில் நல்ல இடத்தில் இருக்கிறேன்'' என்றுள்ளார்.


Click it and Unblock the Notifications