கலவரத்துக்கு நடுவே பாம்பு பௌலிங் போட்ட மும்பை ஸ்பின்னர்.. தப்பிப் பிழைத்த ரஸ்ஸல்!!
கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையே ஆன போட்டியில் ரன் மழை கொட்டியது. இதற்கிடையே, இரு அணிகளின் பந்துவீச்சாளர்கள் மாட்டிக் கொண்டு திணறினர்.
இந்த கலவரத்துக்கு நடுவே, தன் புதிய பந்துவீச்சு முறையை பயன்படுத்தி வெற்றி கண்டார் மும்பை அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளர் ராகுல் சாஹர்.

புதிய முறை
ராகுல் சாஹர் லெக் ஸ்பின்னர் ஆவார். பொதுவாக பந்துவீச்சாளர்கள் வலது அல்லது இடது புறத்தில் ஓடத் துவங்கி அதே பக்கம் இருந்தே பந்து வீசுவார்கள். ஆனால், இதை மாற்றி கொல்கத்தா அணிக்கு எதிராக புதிய முறையை கையாண்டார் ராகுல் சாஹர்.

பாம்பு போல..
இடது புறம் இருந்து ஓடத் துவங்கிய அவர், பாம்பு போல நெளிந்து, இங்கேயும், அங்கேயுமாக கை, கால்களை இழுத்து பந்து வீசினார். இது போல எல்லாம் பந்து வீசினால் பேட்ஸ்மேன்கள் ஏமாற மாட்டார்கள் என பலரும் நினைத்தனர்.

பாம்புக்கு கிடைத்த விக்கெட்
ஆனால், கொல்கத்தா அணியின் கிறிஸ் லின் அரைசதம் அடித்த நிலையில், இவரது பந்தை தூக்கி அடித்தார். அது சிக்ஸ் போகும் என நினைத்தால், பாதி தூரத்திலேயே கேட்ச் பிடிக்கப்பட்டது. கிறிஸ் லின் பாம்பு பௌலிங்கால் ஆட்டமிழந்து வெளியேறினார்.

கேட்ச் போச்சே!
அடுத்து அதிரடி பேட்ஸ்மேன் ரஸ்ஸல் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் கிறிஸ் லின் போலவே சாஹரின் பாம்பு பௌலிங்கை தூக்கி அடித்தார். ஆனால், பீல்டர் கேட்ச்சை கோட்டை விட்டார். பாம்பிடம் தப்பிய ரஸ்ஸல் அடுத்து வேட்டை நடத்தினார்.

ரஸ்ஸல் அதிரடி
இந்தப் போட்டியில் ரஸ்ஸல் 40 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து மும்பை அணிக்கு இமாலய இலக்காக 233 ரன்கள் நிர்ணயிக்க காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அந்த கேட்ச்சை பிடித்திருந்தால், போட்டியில் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கும்.

சாஹர் பந்துவீச்சு
பாம்பு முறையில் வீசிய ராகுல் சாஹர் அதிக ரன்கள் கொடுத்தாலும், 1 விக்கெட் வீழ்த்தினார். மும்பை பந்துவீச்சாளர்கள் மொத்தமே 2 விக்கெட்கள் தான் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications